tamilnadu

img

 தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவினாசி, மே 25- அவிநாசி அருகேயுள்ள சேவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சேவூர் ஊராட்சிக்குட்பட்ட கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை, ஆகிய பகுதிகளிலும், முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர், அசநல்லி பாளையம் சாலை, முறியாண்டம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள், ஜவுளிகடைகள், தள்ளுவண்டி கடைகள் ,மளிகை கடைகளில், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் 20 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமையன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் டம்ளர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மொத்தம் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை வைத்திருந்தகடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம்வசூலிக்கப்பட்டது. இதன்படி முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் ரூ.8,100 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் சேவூர் ஊராட்சியில் மொத்தம் ரூ.15, 200 வசூலிக்கப்பட்டது. மேலும், இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் பயன்படுத்தினாலோ, அதனை விற்பனை செய்தாலோ ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.