திருப்பூர், செப். 21 – ஏற்றுமதி தொழில் சார்ந்த நலனுக்காக அரசியல் சார்பில்லாமல் செயல்பட வேண்டிய நிலையில், அரசியல் சார்புடன், தொழில் ரீதியாக பங்குதாரர்களாகவும் இருப்போரின் பிடியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கமும், நிப்ட் டீ கல்லூரியும் சிக்கியுள்ளன என்று பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செப்.20ஆம் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த டி.குமார் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டார். எனினும் பெரியவர்கள் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தி இந்த போட்டியில் இருந்து விலகுவதாக டி.குமார் அறிவித்தார். வேட்புமனு வாபஸ் தேதி முடிந்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், திட்டப்படி வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டது. இதில், குமார் ரகசியமாக ஏற்றுமதியாளர்களிடம் ஆதரவு திரட்டி 20ஆம் தேதி வாக்குப்பதிவில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கப்போவதாக தகவல் பரவியது. இதற்கு மறுப்புத் தெரிவித்தும், தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்ற நிலையிலும் டி.குமார் (செப்.20) வெள்ளியன்று 9 பக்க கடிதத்தை ஏற்றுமதியாளர் சங்க அனைத்து உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தில், தான் போட்டியிட முடிவு செய்தது, பின்னர் போட்டியில் இருந்து விலகியது, சங்க நிர்வாகிகள், குறிப்பாக தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் அணுகுமுறை ஆகியவை குறித்து விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். இந்த கடிதத்தில் உள்ள சில விபரங்கள் வருமாறு: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் மீது அரசியல் சாயம் விழத் துவங்கியுள்ளது. இதைப் பற்றி தலைவர் ராஜா சண்முகம்,பொதுச் செயலாளர் விஜயகுமாரிடம் பேசி, சில செயல்களைத் தவிர்த்துவிடலாம் என வலியுறுத்தினேன். ஆனால் தான் சார்ந்த அரசியல் இயக்கத்தின் பிரதிநிதியாகவே செயல்படுவேன் என்று விஜயகுமார் உறுதியாக கூறினார். சங்கத்திற்கு நிர்வாகிகளாக மனிதர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சங்கம் நிலையானது. அதன் மாண்பை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு உண்டு. தொழிலில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் டீ சங்கத்திலும், நிப்ட் டீ கல்வி நிறுவனத்திலும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் நிலை தற்போது உள்ளது. இரண்டுமே பங்குதாரர்களின் சங்கமாக உருவெடுத்துள்ளது. 2019-21 ஆண்டுக்கான சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரவர் விருப்பப்படி போட்டியிடுங்கள், மறுபடி அணி சேர்க்க வேண்டாம் என தலைவர் ராஜா சண்முகம் வேண்டுகோள் வைத்தார். ஆனால் வேட்புமனு வாபஸ் காலம் முடிவடைந்தவுடன் அதற்கு நேர்மாறான செயல்கள் அரங்கேறின. 3 பதவிகளுக்கு போட்டி முடிவானநிலையில், விஜயகுமார், செந்தில்குமார், சோமசுந்தரம் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு இவர்களால் மட்டுமே சங்கம் 3 வருடமாக செயல்பட்டது, அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், தவறானவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என அணியின் தலைவராக ராஜா சண்முகம் வேண்டுகோள் விடுத்தது ஜனநாயகமா? வாபஸ் தேதி முடிந்த நிலையில் மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்ட அரை மணி நேரத்தில் அந்த பட்டியல் அகற்றப்பட்டது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. இருப்பினும் பெரியவர்கள் வேண்டுகோளை ஏற்று ராஜா சண்முகம், விஜயகுமாரிடம் நேரிடையாக சங்க அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். இறுதியில் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து போட்டியில் இருந்து விலகுவதாக உறுதியளித்து போட்டி சூழலைத் தவிர்த்தேன். அவர்கள் ஒவ்வொரு செயலையும் பகை முரண்பாடுகளாகவே பார்க்கவும், கருதவும், ஏற்கவும் பழகிய பின்னர் அதை மாற்ற முற்பட்டுத் தோற்றுவிட்டேன். நட்போடு முரண்படுவது சாத்தியம் என்றாலும், அதை மன முரண்களாக மாற்றி சேமித்து வைத்து வெளிப்படுத்தும் மனிதர்களின் இடையே இயங்குவது மன நலத்தை விலையாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த கட்டாயம் எனக்குத் தேவை இல்லை. நிப்ட் டீ கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு குறைபாடுகள் குறித்து, நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற முறையில் கேள்வி எழுப்பியதை தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சி என கூறியதால், குறை சொல்லி பொறுப்பிற்கு வர வேண்டிய தாழ்நிலையில் நான் இல்லை என்பதால் போட்டியில் இருந்து விலகினேன். அதற்காக கல்லூரியில் நான் கேட்ட தகவல்களைக் கொடுக்காமல் இழுத்தடிப்பதும், அத்துடன் நாகரிகமற்ற, ஆணவத்தின் உச்சத்தில் எழுதிய பதில் கடிதத்தைக் கண்டும் பயந்து பின்வாங்க மாட்டேன். “கல்லூரியின் இரண்டாம் நிலை கடைநிலை ஊழியருக்கு நேரம் இருப்பின் நீங்கள் கேட்ட விபரங்களைத் தருகிறோம்” என எனக்கு கிடைத்த பதிலில் உள்ள ஒரு வரி அவர்களின் நிலையைக் காட்டுகிறது. ஏதோ முறைகேடு நடந்துள்ளதாக கருத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேர்தல் முடிந்தபிறகு இக்கடிதத்தை அனுப்பியுள்ளேன். ஏனெனில் இதற்கு முன் அனுப்பியிருந்தால், அதை நான் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற செய்யும் உத்தியாக சிந்திப்பார்கள். ஆணவத்தின் பலம் அது, தான் குடியேறியவரிடம் சேர்ந்திருப்பதை அவர் அழியும் வரை உணராமல் இருக்கச் செய்வதே, தனக்குள் ஆணவம் புகுந்துள்ளதை அறியாமல் இருப்பது ஆகப்பெரிய பலவீனம். அனைவரின் கருத்துக்கும் செவி மடுத்து, நியாயம் என்பதை, தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் உணர்வதைத் தவிர்த்து பொதுவில் சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தின் தலைவர் அல்ல, ஒரு சக்திவாய்ந்த சங்கத்தின் தலைவர் என ராஜா சண்முகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் டி.குமார் கூறியுள்ளார். இக்கடிதம் திருப்பூர் ஏற்றுமதியாளர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பாஜக ஆதரவாளராகவும், பொதுச் செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக செயல்படுகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. - (ந.நி)