திருப்பூர், மே 27 – திருப்பூரில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த சுற்றுலா டிராவல் ஏஜென்ட் மீது பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து திங்களன்று எல்ஐசிமுகவர்கள் சங்கச் செயலாளர் வி.மணிகண்டன் உள்பட ஏராளமானோர் திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் கூறப்பட்டிருப்பதாவது: திருப்பூர் அவிநாசி சாலையில் ஸ்ரீ முத்துபிளாசா என்ற தனியார் வணிகவளாக கட்டிடத்தில் டிராவல் கிராப்ட் என்ற சுற்றுலா டிராவல் ஏஜென்ஸி செயல்பட்டு வந்தது. இதனை உரிமையாளர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி, அக்கா ஆகியோர் நடத்தி வந்தனர்.இங்கு எல்ஐசி முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64 பேர் மலேசியாவிற்கு கோடை கால சுற்றுலா செல்வதற்கு ஒருவருக்கு சுமார் ரூ.14 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தி இருந்தோம். இதில் 34 பேர் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு திரும்ப வந்துவிட்டனர். மேலும் 30 பேரிடம் மலேசியா செல்வதற்கு டிக்கெட் மற்றும் விசா ஏற்பாடு செய்து அழைத்துச் செல்வதாக தெரிவித்தனர். எனினும் காலதாமதம் செய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மலேசியாவுக்கு புறப்படலாம், திங்களன்று மதியம் அலுவலகத்திற்கு வந்து டிக்கெட் மற்றும் விசாவை பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.அதன்படி திங்களன்று டிராவல்அலுவலகத்துக்குச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர் மணிகண்டன் மற்றும் அங்கு பணி செய்த ஊழியர்களைத் தொலைபேசியில் அழைத்தபோதும், தொடர்புக்கு வரவில்லை. அத்துடன் முருங்கப்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோதும் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் குடும்பத்தினர் இன்று (திங்களன்று) காலை பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றதாக அந்த குடியிருப்பின் காவலாளி தெரிவித்துள்ளார்.இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். புகார் கொடுத்த மணிகண்டன் உள்ளிட்டோர் இதுகுறித்து மேலும் கூறுகையில், சுற்றுலா செல்வதற்காக மேற்படி நிறுவனம் குறித்துவிசாரித்தபோது கடந்த 9 ஆண்டுகளாக நல்ல நிலையில் செயல்பட்டு பலரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று வந்த விபரம் தெரிந்தது. அந்த நம்பிக்கையில்தான் பணம் செலுத்தினோம். அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணச் செலவுக்கு வெளிநாட்டு டாலராக மாற்றுவதற்கு இந்த ஏஜென்ஸி மூலம் பலர் லட்சக்கணக்கில் இந்திய பணத்தைக் கொடுத்துள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், பாலி, தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் இதேபோல் பல குழுவினர் இங்கு பணம் செலுத்தி உள்ளனர். வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்யவும் பணம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மேற்படி நிறுவனத்தினர் ஏமாற்றி மோசடி செய்ததாகத் தெரியவருகிறது. மேலும் பலரது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வெளிநாட்டுப் பயணத்துக்காக அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் மீட்டுத் தருவதுடன், பணத்தையும் மீட்டுத் தர வேண்டும், மோசடி செய்த டிராவல் ஏஜென்ட் மணிகண்டன் மற்றும்அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.இவர்களது புகார் மனுவைப் பெற்ற காவல் துறையினர் டிராவல்ஏஜென்ட் மோசடி குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.