tamilnadu

பழைய பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழர் பண்பாடு கலாச்சார பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

அவிநாசி, மே 14- பள்ளி கல்வித்துறை பழைய பாடத் திட்டத்தை தொடர வேண்டும் என திங்களன்று நடைபெற்ற தமிழர் பண்பாடு கலாச்சார பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை செயற்குழுக் அவசர கூட்டம் கிழக்கு வீதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரவைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் சுப்பிரமணியம், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் அப்புசாமி, கோபாலகிருஷ்ணன், தமிழக பணி நிறைவு ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் செ.சுப்பிரமணியம், செயலாளர்முருகேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தின்படி ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்பின் தமிழ் இரண்டு பாடமாக உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அப்பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதாக கூறி ஒரே பாடமாக மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ் இரண்டாம் தாளை நீக்கிவிட்டு பாடத் திட்டத்தை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பொது அறிவு திறன் வளராது. மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி பாடங்கள் உள்ளன. தற்போது பள்ளிக்கல்வித்துறை அதில் மாற்றம் செய்வதாக கூறி, இரண்டு மொழிப்பாடங்களில் விருப்பப் பாடமாக ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் பரிந்துரை செய்துள்ளதை பேரவை கண்டித்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமானால் மாணவர்கள் தற்போதைய சூழலில் தமிழை விடுத்து ஆங்கில மொழிப் பாடத்தை மட்டும் சேர்ந்து பயில முயல்வார்கள். ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தேர்ந்தெடுத்து தமிழை புறக்கணிக்கும்  நிலை உள்ளது. இதன்பின் தமிழ் மொழி வளர்ச்சி தடைபடும். எனவே தமிழக அரசு இருமொழி பாடத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மேலும் தமிழ் வளர்ச்சிக்கும் வழிவகை செய்ய பழைய பாடத்திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.