தாராபுரம், ஜுன் 6 -தாராபுரத்தில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.பெருந்துறை திங்களுர் அய்யர்வீதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் அண்ணாமலை (44). காய்கறி வியாபாரியான இவர் கடந்த 15.02.2012 அன்று காய்கறி வியாபாரம் தொடர்பாக தாராபுரம் திருப்பூர் ரோடு காதப்புள்ளபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, இவர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அண்ணாமலை உயிரிழந்தார். இதையடுத்து, தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் அண்ணாமலை குடும்பத்தினர் மோட்டார் வாகன நஷ்டஈடு வழக்கு தொடுத்தனர். இதில் ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்து 400 ஐ அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈடாக வழங்கவேண்டும் என தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கடந்த 9.10.2017 அன்றுதீர்ப்பளித்தார். ஆனால் தீர்ப்பின்படி நஷ்ட ஈட்டுதொகையை அரசு போக்குவரத்து கழகம் செலுத்தவில்லை. இதையடுத்து தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தாராபுரம் சார்பு நீதிபதி சரவணக்குமார் உத்தரவின்பேரில் சத்தியமங்கலத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.