திருப்பூர், ஜூன் 16 - மத்திய அரசு வெளி யிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பல்வேறு வகை யிலும் பாதகமானதாக இருப்பதால் அதை திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பூரில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் ஞாயிறன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது. தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருப்பூரின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள், கல்வித் துறை சார்ந்தவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை என்பது மொழிரீதியாக மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவதாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கல்வியை வணிகமயம் ஆக்கவும், ஏழை, எளிய நலி வடைந்த பிரிவினரின் கல்வி வாய்ப்பை மறுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. அத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல் அடிப்படையில் வகுப்புவாத கண்ணோட்டத்துடன் அறிவியலின் இடத்தில் ஆன்மிகத்தையும், வரலாற்றின் இடத்தில் இதிகாசத்தையும் மாற்றும் சூழ்ச்சியும் இதில் உள்ளது. எனவே எல்லா வகையிலும் சாமானிய வீட்டுக் குழந் தைகள், எதிர்கால சந்ததியினரின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடியதாக இது உள்ளது. இது புதிய கல்விக் கொள்கை அல்ல, ஏகலைவனின் கட்டை விரலைப் பறித்த துரோணாச்சாரியாரின் அதே பழைய பாணி கல்வி முறைதான் புதியதாக முன்வைக்கப்படுகிறது. எனவே கல்வியில் அறிவியல் மனப்பான்மையை மறுக்கும், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு எதிராக மைய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும், வணிகமயத்தை, காவிமயத்தைப் புகுத்தும்புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றோர் கூறினர். இதையடுத்து வரும் ஜூன் 21ஆம் தேதி திருப்பூர் தியாகி குமரன் நினைவுப் பூங்கா அருகே கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்ப்பு இயக்கம் நடத்துவது, ஜூலை 7 ஆம் தேதி திருப்பூரில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டை மிகப் பெரியளவில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள் உள் ளிட்ட அனைத்துத் தரப்பு பொது மக்கள் பங்கேற்புடன் நடத்துவது என்றும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தீங்கான இந்த கொள்கைக்கு எதிராக குழந்தைகள், எதிர்காலத் தலை முறையின் அறிவு மலர்ச்சியையும், அறம் சார்ந்த பண்பாட்டு வளர்ச்சியையும் ஏற் படுத்தக் கூடிய மாற்றுக் கல்விக் கொள்கை யை மக்களிடம் பரப்பவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜூலை 7 ஆம் தேதி மாநாட்டை வெற்றி கரமாக நடத்த 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச் செயலாளர் செ.நடேசன், அறிவியல் இயக்கத்தின் தலைவர் செல்லதுரை, தமுஎகச மாவட்டத் துணைத் தலைவர் நாட்ராயன், தாய்த்தமிழ் பள்ளி தாளாளர் கு.நா.தங்கராசு, தாய்த் தமிழ்ப் பள்ளி நிர்வாகி திருப்பதி, பதியம் பாரதிவாசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கனக ராஜா, பொருளாளர் ஜெயலட்சுமி, இள ஞாயிறு, காளியப்பன் உள்பட பலர் பங் கேற்றனர். நிறைவாக சீரங்கராயன் நன்றி கூறினார்.