அவிநாசி, மே 16-அவிநாசி அருகே உயர் மின் அழுத்த மின் கம்பி துண்டாகி தொடர்ந்து வீடுகளில் மின் மீட்டர்கள், மின் சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை சேதமடைந்து வருவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி, சத்தியா நகர் ஆதிதிராவிடர் காலனியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் தனியார் நூற்பாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைக்கு ஆதிதிராவிடர் காலனி வழியாக உயர் அழுத்த மின் கம்பிசெல்கிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை நூற்பாலைக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பிதுண்டித்து, அதே மின்கம்பங்களில் கீழ் பகுதியில் வரும் வீட்டு உபயோக தாழ்வு அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், 70க்கும் மேற்பட்ட வீடுகளில்உள்ள மின் மீட்டர்கள், 5க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனபொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்தமின் வாரிய அதிகாரி வினோதினியையும் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே 6 மாதத்திற்கு முன் இதே மின்மாற்றியில் உள்ள நூற்பாலைக்குச் செல்லும்உயர்மின் அழுத்தக் கம்பி துண்டாகி, வீட்டு மின் இணைப்புகள் மீது விழுந்ததால், இதேபோல்மின் மீட்டர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின் விசிறிஉள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து பொதுமக்கள், மின் சாதனப் பொருட்கள் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எங்கள் பகுதி வழியாக நூற்பாலைக்குச் செல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்று வழியாக கொண்டு செல்ல வேண்டும் எனக்கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பரமசாமி, வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள், மின் வாரிய உதவி பொறியாளர் வினோதினி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உயர் அழுத்தமின் பாதையை வேறு இடத்திற்குமாற்றியமைக்க, இடம் தேர்வு மதிப்பீடு செய்து விரைவில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், வீட்டு உபயோக மின் பொருட்கள் சேதத்தை கணக்கிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டுகலைந்து சென்றோம். இந்நிலையில் தற்போது மீண்டும் இதே பிரச்சனை நீடிக்கிறது. எனவே உடனடியாக நூற்பாலைக்குச் செல்லும் உயர் அழுத்த மின் பாதையை மாற்று வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடனடியாக சேதமடைந்த வீட்டு மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மேலும்நூற்பாலைக்கு செல்லும் உயர்அழுத்த மின் கம்பியும் வேறு பாதையில் மாற்றியமைக்கபடும் எனமின்வாரியத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.