tamilnadu

img

வெள்ளகோவிலில் 500 ஆண்டுகள் பழைமையான பன்றி குத்திப் பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

 திருப்பூர், மே 15 - திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி, சா.மு.ரமேஷ்குமார், ரா.செந்தில்குமார் மற்றும் சு.வேலுசாமி ஆகியோர் வெள்ளகோவில் அருகே மேற்கொண்ட கள ஆய்வின்போது கொடிகளும், செடிகளும் சூழ, மண் மேவி இருந்த நடுகல்லை கண்டுபிடித்தனர். இதைச் சுத்தம் செய்து பார்த்தபோது அந்த வீர நடுகல் சுமார் 500 ஆண்டுகள் பழமையான பன்றி குத்திப்பட்டான் நடுகல் எனக் கண்டறிந்துள்ளனர்.இதைப் பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் சு.ரவிக்குமார் கூறியதாவது: வேளாண் செய்து பயிர்களை வளர்க்கும்போது, அப்பயிர்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் வலிமைமிக்க காட்டுப் பன்றிகளைப் கொல்வது சிரமமான செயலாகும். காட்டுப்பன்றியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாகவும், வீரத்தின் அடையாளமாகவும் பண்டைய தமிழ் மக்கள் நடுகற்கள் எடுத்து அவற்றைப் போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.இவ்வகையில் வெள்ளகோவிலில் கிடைத்துள்ள வீர நடுகல் 145 செ.மீ உயரமும், 85 செ.மீ அகலமும் உடையது. இதில் வீரனின் தலை வலது புறம் திரும்பிய நிலையிலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட சிகை அலங்காரத்துடனும் மிக நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய ஆடையும் அணிந்து மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். மாவீரன் தனது இடது கையில் கயிற்றுடன் கூடிய ஒரு கூர்மையான ஆயுதத்தின் மூலம் காட்டுப்பன்றியின் வாய்ப்பகுதியைக் குத்தி அப்பன்றி தன் வாயைத் திறக்க முடியாத வண்ணம் கயிற்றின் மூலம் இறுக்கியுள்ளார். தன் வலது கையில் உள்ள வீரவாள் மூலம் பன்றியின் கழுத்துப் பகுதியைக் குத்தி அந்த வீரவாள் பன்றியின் கழுத்துக்கு வெளியே வரும்படி இந்த வீர நடுகல்லைச் சிற்பி வடிவமைத்துள்ளார். இந்த வீர நடுகல்லின் மற்றும் ஒரு சிறப்பம்சமாக, வீரன் பன்றியுடன் போரிடும்போது வீரனுடைய நன்றியுள்ள நாய் மாவீரனுக்கு உதவியாக பன்றியின் இடது பின்னங்காலைக் தாக்குகின்றது. இந்த நடுகல்லில் எழுத்துப்பொறிப்புகள் ஏதும் இல்லாததால் சிலை அமைப்பை வைத்து பார்க்கும் போது இந்நடுகல் கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிய வருகின்றது.இவ்வீரநடுகல் மூலமாக துன்பத்தை தரக்கூடிய பன்றியைக் கொன்று அந்த வீரச்செயலின் போது தன் இன்னுயிரையும் ஈத்த மாவீரன் மற்றும் அவரது நாயின் நினைவாக நடுகல் எழுப்பிச் சிறப்பிக்கப்பட்டு இருப்பது, பண்டைய மக்கள் தங்களை அழிவிலிருந்து காப்பாற்றுபவரைப் போற்றி வணங்கும் இயல்புடையவராய் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.