articles

img

கியூபாவின் சோசலிசமும் ஏகாதிபத்திய தாக்குதலும் - எஸ். கண்ணன்

கியூபாவின் சோசலிசமும்  ஏகாதிபத்திய தாக்குதலும்

1956 ஜூலை 26, கியூப நாட்டின் தேசிய தினம், பாடிஸ்டா அரசின் மான்கடா படைத்தளம் மீது, பிடல் காஸ்ட்ரோ தலைமை யிலான, புரட்சிப் படைத் தாக்குதல் நடத்திய நாள். அந்த புரட்சி தோற்றுப் போனது. பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற உரையின் போது பிடல் காஸ்ட்ரோ நிகழ்த்திய உரை, ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ எனும் நூலாக வெளி வந்துள்ளது. படித்த மருத்துவர்கள் ஏராளமாக வேலைக்கு காத்திருக்கும் போது மருத்துவமனை இல்லை. இருக்கும் மருத்துவமனையிலும், மருத்து வர்கள் இல்லை. ஆசிரியருக்கு படித்த ஆசிரியர்கள் ஏராளம் உள்ளனர். ஆனால் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் இல்லை. சொத்துக்கள் சிலரிடம் குவிந்து உள்ளது. ஏழைகள் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். இப்படியான ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து புரட்சி செய்வது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்று என கம்பீரமாக, பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் முழங்கியதை, எப்போது படித்தாலும், கிளர்ச்சி உணர்வு மேலோங்கும்.

பின்னர் 1959 ஜனவரி 1 அன்று புரட்சிப் படைகள், பாடிஸ்டா அரசின் படைகளை தோற்கடித்து, ஹவானா நகருக்குள் நுழைந்து, ஆட்சியை கைப்பற்றின.  1961ஆம் ஆண்டு அந்த நாடு முழு எழுத்தறிவு பெற்ற நாடாக மாறியது. 50 குடும்பங்களுக்கு ஒரு மருத்து வர் எனும் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றது. கல்வி, விளையாட்டு என தலை சிறந்த முன்னேற்றங்களை கண்ட நாடாக உள்ளது. அண்மையில் கோவிட் 19 இன் போது, உலகம் பெருந்தொற்று நோயால், பேராபத்தை சந்தித்த போது, போப் தலைவராக உள்ள வாடிகன் முதல் உலகின் பல நாடுகளுக்கு மிகச் சிறந்த மருத்துவர்களை அனுப்பி, மக்களை காத்த நாடு கியூபா. அமெரிக்கா அரிக்கேன் புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் உயிர்ப்பலி மற்றும் உடைமைகளை பறிகொடுத்த போது, சின்னஞ்சிறு கியூபா, அது போன்ற இயற்கைத் தாக்குதல்களை, எதிர்த்து, முன்னெச்சரிக்கையாக செயல்படும் திறனை பெற்று, ஒரு உயிரைக் கூட பலியாக விடாமல் தடுத்த வல்லமை கொண்டது. 

கியூபாவும் – அமெரிக்காவும்

சுமார் 65 ஆண்டு கால புரட்சிகரச் செயல்பாடு களில் பல முன்னேற்றங்களைப் பெற்று இருந்தாலும்,  அமெரிக்காவிற்கு மிக அருகில் 145 கி. மீ தொலை வில் உள்ள சோசலிச நாடு ஆகும். கியூபாவில் நடந்த புரட்சி துவக்கம் முதலே அமெரிக்காவிற்கு ஆத்திரம் அளித்த ஒன்றாகும். 1961ஆம் ஆண்டு, கியூபாவின் பன்றி வளைகுடா பகுதியில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ- வினால் பயிற்சி அளிக்கப்பட்ட எதிர்ப்புரட்சி சிந்தனை  கொண்ட, 2000 கியூபாவினரைக் கொண்டு, கியூபப் புரட்சியை ஒழிக்க முயற்சி எடுத்தனர். ஆனால்,  கியூபா இந்த தாக்குதலை எதிர்கொண்டு புரட்சியை  நிலை நாட்டியது. அதன் பின்னரே, கியூபா அன்றைய சோவியத் யூனியனுடன் மிக நெருக்கமான நட்புறவை உருவாக்கிக் கொண்டது. 

ஆத்திரம் கொண்ட அமெரிக்கா பிடல் காஸ்ட்ரோவின் உயிரைப் பறிப்பதில் தீவிரம் காட்டியது. சி.ஐ.ஏ மற்றும் இதர முகமைகள் மூலம்  பல நூறு கொலை முயற்சிகளை பிடல் காஸ்ட்ரோ மீது ஏவியதாக கூறுகின்றனர். 1975இல் சர்ச் கமிட்டி,  1960-65 காலத்தில் மட்டும் 9 முறை பிடல் காஸ்ட்ரோவை  கொலை செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டதாக பதிவு செய்துள்ளது. கியூபாவின் உளவுப் பிரிவு தலைவர் பாபியன் எஸ்கல்னேட் 634  முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய  முயற்சிகளை அமெரிக்காவும் அதன் நிறுவனங்களும் மேற்கொண்டதாகக் கூறுகிறார். 

அதேபோல் கியூபா மீது அமெரிக்கா பொருளா தாரத் தடை விதித்தது, மட்டுமின்றி பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என தொடர்ந்து மிரட்டி வருகிறது. 1959 ஜனவரி 1 புரட்சி வெற்றி என அறிவிக்கப் பட்ட நாளில் இருந்து, அமெரிக்காவுக்கு சொந்தமான பல சொத்துக்களை கியூபாவின் புரட்சிகர அரசு, நாட்டுடமை ஆக்கியது. அதற்கு முன்னதாகவே, படிஸ்டா ஆட்சியின் போதே, அமெரிக்கா கியூபா உடனான போர்த் தளவாடங்கள் பரிமாற்றத்தை நிறுத்தியது. பன்றி வளைகுடா போர் மூலம், கியூபாவை பணிய வைக்க, அன்று இருந்த ஜான் எஃப் கென்னடி அரசு, முயற்சி செய்து தோல்வியுற்ற நிலையில், கியூபா மீது, மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் தவிர மற்ற வணிகம் அனைத்தையும் தடை செய்தது. பின்னர் அன்றைய சோவியத் யூனியன் கியூபாவிற்கு ராணுவ ரீதியில் உதவும் பொருட்டு, ஏவுகணை தளம் அமைக்க உதவியது. அது முதல் முழு வர்த்தகத் தடையை விதித்து வருகிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வருகிறது.

2012 முதல் 2016 வரை ஓபாமா, இரண்டாவது முறை அதிதிபராக தேர்வான பின்னர் பதவிக்கால இறுதிக் கட்டத்தில், கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டு, சில தடைகளை விலக்கினார். அதுவும் டிரம்ப் 2016ஆம் ஆண்டில் தேர்வான போது அந்த விலக்கு களை ரத்து செய்து மீண்டும் தடைகளை விதித்தார்.  குறிப்பாக சோசலிச சோவியத் யூனியன் பல நாடு களாகப் பிரிந்து, சோசலிசக் கொள்கைகளைக் கைவிட்ட போது, கியூபாவை பணிய வைக்க, அமெரிக்கா 1996இல் ஹெல்ம்ஸ் அண்ட் பர்ட்டன்  ஆகியோரை கொண்ட குழு மூலம் நாடாளு மன்றத்தில் கியூபாவிற்கு எதிராக சட்டத்தை முன் மொழிந்து அமலாக்கியது. இது கியூபா மீது நிரந்தர மாக, பொருளாதாரத் தடையை பின்பற்றும் கொடிய நடவடிக்கை ஆகும். சோவியத் உதவி இல்லாத கியூப அரசையும், அதன் மக்களையும் பணிய வைக்கும் நோக்கம் கொண்ட இந்த சட்டத்தால் கியூபாவை அசைக்க முடியவில்லை என்பதே வரலாறு.

கியூபா கட்டமைத்த  ஏகாதிபத்திய எதிர்ப்பு

அமெரிக்காவின் மேற்படி பொருளாதார ரீதியான யுத்தத்திற்கு எதிராக, பிடல் காஸ்ட்ரோ ஐக்கிய நாடுகள் சபையில் 1960 கால கட்டத்தில் 249 நிமிடங்கள் கொண்ட உரையை நிகழ்த்தினார். அமெரிக்காவிற்கு எதிரான வலுவான வாதத்தை முன் வைத்தார். இது உலக மக்களை உலுக்கியது என்றால் மிகையல்ல. குறிப்பாக அமெரிக்காவில் இருந்த பலரை கியூபாவிற்கு ரகசியமாக பயணம் மேற்கொள்ள தூண்டியது. தமிழ்நாட்டில், உழைக்கும் பெண்கள் அமைப்பாளராகவும், மாதர்  இயக்க தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவராகவும் செயல்பட்ட மைதிலி சிவராமன், அந்த காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையில்  பணியாற்றினார். அவர், கனடாவிற்கு சென்று, அங்கிருந்து கியூபாவிற்கு பயணம் மேற்கொண்ட அனுபவம் கொண்டவர். பிடல் காஸ்ட்ரோவின் உரை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், கியூபா ஆதரவு பெறவும் வழிவகுத்தது.

அமெரிக்க நாடாளுமன்றம் ஹெல்ம்ஸ் அண்ட் பர்ட்டன் சட்டம் 1996இல் இயற்றிய பின்னணியில் தான், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்தன. வெனிசூலா சோசலிஸ்ட் கட்சி சாவேஸ் தலைமையில் மாற்றம் கண்டது. நிகரகுவா, ஈகுவடார், பொலிவியா, சிலி, அர்ஜண்டைனா, பிரேசில், பெரு, உருகுவே, மெக்சிகோ, கொலம்பியா என பல நாடுகள் இடதுசாரிக் கட்சிகள் மூலமான மாற்றத்தை அரசு கட்டமைப்பில் உருவாக்கின. வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான போராட்டமாக தீவிர மாற்றத்தைக் கொண்ட கண்டமாக இன்றைக்கும் உள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம் கியூபா என்பது உலகறியும். எனவே அமெரிக்காவின் வன்மம் கியூபா மீது அதிகரித்து வருகிறது. 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பல விதங்களில் இருந்தாலும், சோசலிச சோவியத் யூனியன் இருந்த வரை கியூபாவின் ஏற்றுமதி இறக்குமதி சிரமம் இல்லாமல் இருந்தது. சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின், 1990களில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை கியூபா சந்தித்து வருகிறது. கியூபாவின் அரசியல் முன்மாதிரியாக இருந்த நிலையில் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் கியூபா மற்றும் பிடல், மற்றும் சே ஆகியோரால் ஆகர்சிக்கப்பட்டன. கியூபா தனது மருத்துவக் கொள்கைகளை மற்றும் தன் நாட்டில் இருந்த மருத்துவ உட்கட்டமைப்புகளை, லத்தீன்  அமெரிக்க நாடுகளின் மாணவர்கள் கல்வித் தேவைக்கு பயன்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவும் அமெரிக்காவின் ஆத்திரம் அதிகரிக்கக் காரணம் என்றால் மிகையல்ல. 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள, கியூபா சர்வதேச அளவில் செய்த  முயற்சிகளும், சர்வதேச அளவில் உள்ள ஏகாதி பத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் அளித்த சகோதர ஆதரவும், இன்றளவில் கியூபாவின் புரட்சியை பாதுகாத்து வருகிறது. கியூபாவிற்கான சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டு குழுக்கள் மற்றும் ஜனநாயக சிந்தனைகள் உலகம் முழுவதும் விரிந்து பரந்த நிலையில் உருவானது. லத்தீன் அமெரிக்காவை கடந்து ஆசியக் கண்டத்தில், கியூப நட்புறவு கழகம் செயல்பட துவங்கியது. இந்தியா (சென்னை) உள்ளிட்ட ஆசியாவின் வியட்நாம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஆசியா அளவிலான, கியூபாவிற்கான ஒருமைப்பாடு சார்ந்த மாநாடுகள் நடைபெற்றன. 

சோசலிசத்தை பாதுகாப்பது தொழிலாளி வர்க்கக் கடமை

ஆல்பா (பொலிவாரியன் அல்டெர்னெடிவ் பாங்க்) என்ற பெயரில் பிராந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சியை, கியூபா, வெனிசூலா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக மேற்கொண்டன. மேலும்  கியூபாவின் பெசோ என்ற நாணய பரிவர்த்தனை, லத்தீன் அமெரிக்கா நாடுகள் அனைத்திலும் செல்லுபடி ஆகும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தோழமை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை சோசலிச அமைப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் பகுதியாக உருவாக்கப்பட்டு இருப்பது, உலக அளவில் மிகுந்த ஈர்ப்பைப் பெற்றதாக அமைந்துள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும் இது கூடுதல் ஆத்திர மூட்டும் செயலாக உள்ளது. 

இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபை 2021 ஜூன் 23 அன்று கியூபா மீதான பொருளாதாரத் தடையை விலக்க வேண்டும் என முன் மொழியப்பட்ட தீர்மானத்தின் மீது, 184 நாடுகள்  ஆதரவாகவும், 2 நாடுகள் எதிர்த்தும், 3 நாடுகள் நடுநிலையையும் வெளிப்படுத்தி வாக்களித்துள்ளன. இது கியூபாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி யாகும். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி கியூபாவை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சோசலிசத்திற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குமான போராட்டத்தில் சோச லிசத்தை, பாதுகாப்பது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்.

நிதி உதவியும், சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்துவதும், கியூபாவின் புரட்சிகர உணர்வை பாதுகாக்கும். சுரண்டலற்ற, உற்பத்திச் சாதனங்களை அரசுடைமையாகக் கொண்ட கியூபாவின் கொள்கை உலகம் முழுவதும் பரவ வேண்டும். அது புரட்சியை உலகமயமாக்குவோம் என புறப்பட்ட சே குவேராவின் தேசம் ஆகும். உலகமய முதலாளித்துவக் கொள்ளை லாப வெறியர்களிடம் இருந்து, பிடல், சே, ராவுல், சிலியா சாஞ்சஸ் உள்ளிட்ட புரட்சியாளர்கள் உருவாக்கிய கியூபாவை பாதுகாப்போம். ஏகாதிபத்திய தாக்குதல் களை முறியடிப்போம்! கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)