திருநெல்வேலி:
23 ஆண்டுகளாக 33 சத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாதது குறித்துபெண் வங்கி ஊழியர் மாநில மாநாடு வேதனை தெரிவித்துள்ளது.இந்திய வங்கி ஊழியர் சம்மேளன (பெபி)மாநில மாநாடு நெல்லையில் சனியன்று துவங்கியது. சம்மேளனத்தின் 12ஆவது மாநிலமாநாட்டின் துவக்கமாக திருநெல்வேலி டவுனில் தோழர் வெ.சுந்தரம் நகரில் (லட்சுமி மகால்) மகளிர் மாநாடு காலையில் நடந்தது. எஸ்.புவனேஸ்வரி, ஜெயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் டி.கீதா சிறப்புரையாற்றினார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். பெண் ஊழியர் உபகுழு அமைப்பாளர் எஸ்.பிரேமா அறிக்கை சமர்ப்பித்தார். இந்துமதி வரவேற்றார். தேவிகா நன்றி கூறினார்.
டி.கீதா பேசுகையில், பெண் ஊழியர்களுக்கான பல்வேறு உரிமைகளை பெற தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான தீண்டுதல் மட்டும் அல்ல. உரையாடல், பாட்டு, செய்கை என பல்வேறுவடிவங்களில் இந்த வன்முறை நடத்தப்படுகிறது. பணியிடங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான செயல்பாடுகளே உழைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உதவும்.தொழிலாளர் வழக்கில் ஒரு தீர்ப்பு தவறாகவந்துவிட்டால் அதையே விதியாக மாற்றி மற்ற வழக்குகளிலும் வழங்கப்படும் அபாயம்உள்ளது. எனவே, ஒவ்வொரு வழக்கும் முக்கியமானது. தொழில் தாவா (industrial dispute) க்களில் இண்டஸ்ட்ரி என்பதற்கு 1970இல் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விரிவான விளக்கமளித்து ஒரு தீர்ப்பு வழங்கினார். அதில் ஒரு அமைப்பாக செயல்படும் நிறுவனங்கள் அனைத்தும் இண்டஸ்ட்ரி என வகைப்படுத்தப்பட்டிருந்தது. கோயில்கள் கடைகள் போன்றவற்றையும் உட்படுத்திய இந்த தீர்ப்பை 1983இல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து கட்டுப்படுத்த முயன்றனர். தேசியஅளவிலும் மாநில அளவிலும் தொழிற்சங்கங்கள் வலுவான எதிர்ப்பை தெரிவித்தன. அதன்விளைவாக குடியரசு தலைவரின் ஒப்புதலைப்பெற்ற பின்னரும்கூட இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தாமல் தடுக்க முடிந்தது.பருவநிலை மாற்றம் குறித்து இயக்கம் நடத்தினால் காவல்துறையினர் கைது செய்யும்நிலை உள்ளது. இருக்கும் உரிமைகளை பாதுகாக்கவும், பெறவேண்டிய உரிமைகளுக்காகவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படமுன்வர வேண்டும் என்று பேசினார்.
தீர்மானங்கள்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்குலம் தடைகளை தகர்த்தெறிந்து பல்வேறு துறைகளில் இன்று முன்னேறியுள்ளபோதிலும் அரசியலில் பெண்களுக்கான இடம் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. அரசியல் அதிகாரத்தில் கோலோச்சும் தனது கட்டுப்பாட்டை சிறிதும் தளர்த்த விரும்பாத ஆணாதிக்க சமூகத்தின் அப்பட்டமான வெளிப்பாடே கடந்த 23 ஆண்டுகளாக பந்தாடப்பட்டு வரும் 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடுமசோதா 1996ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணிஅரசினால் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33 சதவிகித இடஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் 81ஆவதுசட்டதிருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான அரசுகள் இதை அமலாக்குவதற்கான உள்ளார்ந்த முயற்சிகள் எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் இம்மசோதாவினை ஆதரிப்பதாக கொள்கை அளவிலும் தங்களது தேர்தல் அறிக்கைகளிலும் பிரகடனப்படுத்திக் கொள்கின்றன. ஆனால், இம்மசோதாவை நிறைவேற்றாமல் பின்னுக்கு தள்ளுவதில் ஒருமித்து செயல்படுகின்றன.
இடதுசாரி கட்சிகள் மட்டுமே இம்மசோதாவை முழுமனதோடு ஆதரிக்கின்றன. இடதுசாரிகளின் முன்முயற்சியால் 2010 ஆம் ஆண்டிலேயே இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும்.தற்போது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எள்ளளவும் தயாராக இல்லை. இந்திய பெண்களின் நலனை முன்னிறுத்தி உடனடியாக 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.மேலும், பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல்களை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம், பணிபுரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் -2013 ஆகியவற்றை பாரபட்சமின்றி கடுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது மாநாடு
பிற்பகல் துவங்கிய வங்கி ஊழியர்களின் பிரதிநிதிகள் மாநாடு மற்றும் பொது மாநாட்டுக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில தலைவர் டி.தமிழரசு தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சி.முத்துகுமாரசாமி வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர்கே.கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். சி.பி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.