திருநெல்வேலி:
சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கி சிறிய வண்டி போன்ற இயந்திரத்தைக் கொண்டு அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்தார்.
பத்மபூஷண் விருது பெற்ற நம்பி நாராயணனுக்கு, தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் சார்பில் பாராட்டு விழா குற்றாலத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
விண்வெளி ஆய்வில் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் எந்த நாடும் இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு நமது செயல்பாடுகள் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் நமது நாட்டின் செயல்பாடுகளை போட்டி என்று கருத முடியாது. அவர்கள் அவர்களது பணிகளைச் செய்தார்கள்; நாம் நமது வேலையைச் செய்கிறோம். சந்திரயான் 1-ன் தொடர்ச்சியாகவே சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது. முந்தைய விண்கலம் சந்திர மண்டலத்தில் இறங்காமல் ஒரு முத்திரையை மட்டுமே பதித்தது. தற்போது அனுப்பப்படும் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கிய பின்னர், ஒரு சிறிய வண்டி போன்ற இயந்திரம் அங்கே மண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும்.
விண்வெளிக்கு அப்பால் உள்ள ஆய்வு என்பது ஒரு கடினமான பணி. இதில் எந்த நாட்டுக்கும் ஒரு நிரந்தரத் திட்டம் இல்லை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் ஆய்வை மேற்கொள்ளும். சந்திரனின் மற்றொரு பகுதியில் சீனா ஆய்வு மேற்கொள்ளலாம். செவ்வாயில் ரஷ்யா ஆய்வுகளை மேற்கொண்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு அவர் கூறினார்.