நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் , நிலவை 9000க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் கே.சிவன் கூறினார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை , கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பின்னர், பல்வேறுபட்ட தடைகளுக்குப் பிறகு சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்டம்பர் 7ஆம் தேதி , அதன் லேண்டர் கலன் , திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. மேலும், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் லேண்டர் வேகமாகச் சென்று நிலவில் மோதி செயலிழந்தது.
அதே நேரம் , விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் , நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின், இரண்டு ஆண்டுகளாக நிலவைச் சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்ற வாரம் பெங்களூரில் நடந்த பயிலரங்க தொடக்க விழாவில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் உரையாற்றினார்.அப்பொழுது, சந்திரயான் -2 விண்கலம் இதுவரை 9000க்கும் அதிகமான முறை நிலவைச் சுற்றிவந்துள்ளது என்று கூறியுள்ளார் . மேலும், சந்திரயான் -2 விண்கலம் அளிக்கும் தகவல்களும், ஆய்வு முடிவுகளும் மிகுந்த ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன என்றும் கூறினார்.