தூத்துக்குடி, ஜூலை 27- கொரோனா பரவல் காரணமாக தளர்வற்ற முழு பொது முடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முடங்கியது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி னர். சாலைகள் வெறிச்சோடின. மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பொதுமுடக்கத்தை மீறியவர் கள்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஆனால் தளர்வில்லாத பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை அருகே சில்லாங்குளம் ஊராட்சி ஓம் சரவணாபுரத்தில் சமுதாய நலக்கூடம் பணி துவக்க விழா தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் விளாத்திகுளம் எம்எல்ஏ., சின்னப்பன், மற்றும் அரசியல் பிரமுகர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரு கிறது. தினமும் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் அவரச மருத்துவ காரணங்களுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை யில் அமைச்சர் பங்கேற்ற இந்த விழா தேவை தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் அரசின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் கேள்விக்குறியாவதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து அரசுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இந்த விழா அரசு விழா கிடையாது. கிராமத்தில் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.