tamilnadu

img

தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்தும் நப்பாசையில் ரெய்டு நடத்தினார்கள்

தூத்துக்குடி, ஏப். 17-தூத்துக்குடியில் தான் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருப்பது தேர்தலை நிறுத்த முயற்சி செய்யும் நப்பாசை என்று கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். ஏப்ரல் 16 மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரில் பிரச்சாரத்துக்காக எடுக்கப்பட்ட வாடகை வீட்டில் கனிமொழி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் அரவிந்தன், மகன், உதவியாளர் சரவணன் மற்றும் சிலர் அந்த வீட்டில் இருந்துள்ளனர். இரவு 8.30 மணியளவில் அங்கு வந்த வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி வருமான வரித் துறையைச் சேர்ந்த கார்த்திகா, மதுரை வருமான வரித் துறை துணை ஆணையர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கனிமொழியின் வீட்டுக்குச் சோதனைக்குச் சென்றுள்ளனர்.கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதை அறிந்த திமுகவினர் வீட்டைச் சுற்றி பெருமளவில் குவிந்தனர்.


வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகக் கனிமொழியின் வீட்டுக்குள் அதிகாரிகள் இருந்துள்ளனர். சோதனை முடிந்து 10 மணிக்கு மேல் வெளியே வந்த அதிகாரிகள் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் எதையும் கூறாமல் உடனடியாக அங்கிருந்து சென்றனர். இந்தச் சோதனையின் முடிவில் வருமான வரித் துறையினர் எதையும் கைப்பற்றவில்லை என்பது உறுதியானது. இதனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.வருமான வரித் துறை அதிகாரிகள் சென்ற பிறகு செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், “வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்ய வீட்டுக்கு வந்தார்கள். அதற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா, இரவில் சோதனை நடத்த அனுமதி உள்ளதா என்று அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சோதனை செய்ய அனுமதித்தோம். 9.30 மணிக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்து, அதற்கு பதில் கொடுக்கச் சொன்னார்கள். இது சட்டத்துக்குப் புறம்பானது. எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே சோதனையிட வந்துள்ளார்கள் என்று தோன்றுகிறது. ஒரு மணி நேரம் சோதனை நடத்திவிட்டு எதுவும் கிடைக்கவில்லை; இந்த வீட்டில் எதுவும் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டார்கள்” என்றார்.


மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதைப் போல தமிழிசையின் வீட்டில் கோடி கோடியாகப் பணம் இருக்கிறது. அங்கு சென்று சோதனையிட வருமான வரித் துறை தயாராக இருக்கிறதா என்று கேள்வியெழுப்பிய கனிமொழி, “தேனியில் நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களை நாம் வாட்ஸ் அப்பிலும், வீடியோவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கு சோதனையிட வருமான வரித் துறை தயாரா? தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதாகவும், பயமுறுத்துவதாகவும் நினைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.அனிதா ராதாகிருஷ்ணனின் தோட்டத்துக்குச் சென்று இரண்டு முறை சோதனை செய்திருக்கிறார்கள். வருமான வரித் துறை சோதனையை வைத்து வேலூரில் தேர்தலை நிறுத்தியுள்ளார்கள். இதைக் காரணமாக வைத்து தூத்துக்குடியிலும் தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்திவிடலாம் என்னும் நப்பாசையில் இந்தச் சோதனையை நடத்தியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இதற்கெல்லாம் பயந்த கட்சி திமுக அல்ல. எதுவாக இருந்தாலும் சந்திப்போம். ஆனால், இது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்றார்.தேர்தல் ஆணையமும், வருமான வரித் துறையும் மோடியுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய கனிமொழி, “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற ரெய்டுகளை நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றும் கூறினார்.