tamilnadu

img

அனல்மின் நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசிகள் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த பாலசிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி துறைமுக நகர், கோயில்பிள்ளை நகர், முத்துநகர், ஒத்தவீடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.


தூத்துக்குடி துறைமுகத்திற்கு சொந்தமான கடற்கரை அருகே அமைந்துள்ள 36.81 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கோயில்பிள்ளை நகருக்கு வ.உ.சிதம்பரம் துறைமுகம் சார்பில் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை தற்போது அனல் மின் நிலையம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. தற்போது புதிய அனல் மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி துறைமுகத்திற்குள் தமிழக அரசிற்கு சொந்தமான அனல் மின் நிலையம் உள்ளது. அனல் மின் நிலையம் போன்றவை அதிக அபாயகரமான என வர்ணிக்கப்பட்டு முதல் வகையில் வரக்கூடியது. இரு அனல்மின் நிலையங்களுக்கு இடையே 10 கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் புதிதாக அமையவுள்ள தனியார் அனல் மின் நிலையம் 10 கி.மீ., தொலைவிற்குள் உள்ளது.


இதனால் பொதுமக்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படும். 3 லட்சம் மக்கள் தொகை உள்ள இடத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவிற்கு அப்பால் அனல் மின் நிலையம் அமைய வேண்டும் என விதி உள்ளது. ஆனால் இந்த புதிய அனல்மின் நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் அமைகிறது. புதிய அனல் மின் நிலைய புனல்கள் விமான நிலைய ஓடுதள பாதைக்கு அருகில் உள்ளது.


எனவே அனல்மின் நிலையம் அமைக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க அளித்த அனுமதி, ஒப்பந்தம், உரிமம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.