tamilnadu

img

நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் குளறுபடிகள்.... விரயமாகும் நெல் - கிழிந்த சாக்குகள் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்....

திருவாரூர்:
டெல்டா மாவட்டங்களில் தற்போது இயங்கி வரும் அரசின் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு பிரச்சனைகளும், குளறுபடி களும் ஆங்காங்கே தொடர்கின்றன.குறிப்பாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் களுக்கு எடுத்து செல்வதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் அடுத்தடுத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கும்,கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கும் தகராறு ஏற்படுவது என்பது எல்லா கொள்முதல் நிலையங்களிலும் வாடிக்கை யாகிவிட்டது. டெல்டா மாவட்டங்களில் உள்ள சிறு,குறு மற்றும் பெரும் விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலைய மையங்களில் கொண்டு வந்து வைத்து 10நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படு கிறது.இன்னொரு புறம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் சுமார் 12லட்சத்திற்கும் மேற்பட்ட மிக மோசமான பழைய கிழிந்த சாக்குகளை தரம்உயர்த்தி பயன்பாட்டுக்காக கொடுத்துள்ளனர்.கொள்முதல் நிலையங்களில் இந்த கிழிந்த பழைய சாக்குகளை பயன்படுத்தி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1மூட்டைக்கு 2கிலோவிற்கு மேல் நெல் மணிகள் கீழே கொட்டி விரயமாகும் வாய்ப்புள்ளது.இவ்வாறு விரயமாவதால் அதில் ஏற்படும் இழப்பு தொகையை கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து வருகின்றனர். 

மேலும் அரசுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.கொள்முதல் நிலைய ஊழியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கிழிந்த பழைய சாக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.கொள்முதல் நிலைய உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கொல்கத்தாவிலிருந்து வாங்கப்பட்ட புதிய சாக்குகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து நெல் மணிகள் சேதாரம் இல்லாமலும் அரசுக்கு இழப்பு ஏற்படாமலும் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு பாதிப்புஇல்லாமலும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

அதோடு நடப்பு சம்பா பருவத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 1243-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆங்காங்கே  விவசாயிகளுக்கும்  கொள்முதல் நிலையஊழியர்களுக்கும் ஏற்படும் பிரச்சனையாலும் வேறு சில குளறுபடிகளாலும் ஒவ்வொரு கொள்முதல் நிலை யத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கின்றன. பலகோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டும் கொள்முதல் செய்யப்படாமலும் உள்ளன.

இதன் காரணமாக விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து நெல் கொள்முதல்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதோடு திடீரென மழை பெய்தால் நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டு நெல் மூட்டைகள் அழிந்து விடும்.இதனால் ஏற்படும்இழப்பும் அரசுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். இந்த குறைபாடுகள் குறித்து நெல் கொள்முதல் நிலைய மேலாளர்களிடம் புகார் தெரிவித்தால் அதை பற்றி கண்டுகொள்ளாத மெத்தனப்போக்கும் தொடர்கிறது. இவ்வாறு தொடரும்
பிரச்சனைகள் மற்றும் குளறுபடி களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் தீவிர கவனம் செலுத்திட வேண்டும்.

- ஆரூரான்