tamilnadu

img

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு

தலைவர்கள்  கடும் கண்டனம்

தஞ்சாவூர், நவ.4-  தஞ்சையில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும், கண்களை கறுப்பு பேப்பரால்  மறைத்தும், மர்ம நபர்கள் அவமதிப்பு செய்த சம்பவம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டி, திருவள்ளுவர் நகரில், தென்னிந்திய வள்ளுவர் சங்கம், திருவள்ளுவர் தெரு வாசிகள், மகளிர்  சுய உதவிக்குழுவினர் சார்பில், திருவள்ளு வர் சிலை அமைக்கப்பட்டு, கடந்த 2005ல், அப்போதைய ஆட்சியர் வீரசண்முகமணி திறந்து வைத்துள்ளார்.  இந்நிலையில், சிலையின் மீது ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள், சாணம் அடித்தும், கண்களை கறுப்பு பேப்பரால் மறைத்தும் சென்றுள்ளனர்.  திங்கள்கிழமை அதிகாலை, பொதுமக்கள் திருவள்ளுவர் சிலை மீது சாணம் அடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல், அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து, அங்கு ஏராளமானோர் குவிந்து சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். தகவலறிந்த தமிழ் பல்கலைக் கழக காவல்துறையினர் மற்றும் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீத்தாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், காவலர்கள், திருவள்ளுவர் சிலையை சுத்தம் செய்து  மாலை அணிவித்தனர். 

கண்டன முழக்கம்

இந்நிலையில் திருவள்ளுவர் படத்தை கையில் ஏந்தியபடி பெண்கள் முழக்கமிட்டனர். திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்.எல்.ஏ. நீலமேகம், அ.ம.மு.க. சார்பில்  வழக்குரைஞர் நல்லதுரை, சிபிஐ மாவட்ட செய லாளர் பாரதி, மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார், திருவள்ளுவர் பேரவையினர் கலந்து கொண்டு, சிலைக்கு மாலை அணிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  தமிழ் பல்கலைக்கழக வாயிலில் இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி தலைமையில் ஏராளமான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம், வல்லம் கிராமத்திற்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுர் சிலையை இழிவுபடுத்தும் வகையில் சில தீய சக்திகள் செயல்பட்டுள்ளன. இந்த அநாகரீகமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இரண்டு தினங்களுக்கு முன்னால் பாஜக பரிவாரத்தைச் சார்ந்த சிலர் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி அவரை ஒரு மத கூட்டுக்குள் அடைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு திருவள்ளுவரை இழிவுபடுத்தியிருந்தனர். திருவள்ளுவர் சாதி, மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மனித மாண்புகளை உயர்த்திப் பிடித்த  பெருமைக்குரியவர் ஆவார். இவருக்கு மதவேஷம் பூசுவது அல்லது சிலையை இழிவுபடுத்துவது போன்ற காரியங்களை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழக அரசு மேற்கண்ட இழிசெயலில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்த செயலுக்கான உள்நோக்கங்களையும் கண்டுபிடித்து மக்களுக்கு  தெளிவுபடுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்கும் பேஸ்புக்கில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார். இதனிடையே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி முழக்கமிட்ட திருவையாறு-தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்.