tamilnadu

img

தேனி: ராட்டினத்தின் தூணை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி  

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தேனி மாவட்டம் வீரபாண்டியில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று டிஸ்கோ பிரேக் என்னும் ராட்டினத்தின் ஒரு தூண் திடீரென சாய்ந்துள்ளது. அதனை சரிசெய்யும் முயற்சியில் உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஈடுபட்டுள்ளார்.    

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    

இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

சித்திரை திருவிழா தொடங்கி மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில், இப்படியொரு நிகழ்வு நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.