தேனி:
கொரோனா தொற்று பரவல் காலத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது போல், கண்ணகி கோவிலிலும் சித்திரை விழாவை நடத்தி, பக்தர்களை அனுமதிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழக- கேரள எல்லையிலுள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலால் மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை நடைபெற்றது. அதைப்போல இந்த ஆண்டு ஏப்.27-ஆம் தேதி கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா நடத்த வேண்டும் என மங்கள தேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை சார்பில் தேனி, இடுக்கி ஆட்சியர்களுக்கு மனு அளிக்கப்பட்டது .இது குறித்து இரு ஆட்சியர்களிடமிருந்து பதில் வராத நிலையில் கூடலூரைச் சேர்ந்த பி.எஸ்.நேரு என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் கேரள உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கல்குவா ஆஜரானார். வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. கேரளஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் வரும் ஏப்.20-ஆம் தேதிக்குள் (செவ்வாய்கிழமை) முடிவைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.