கடமலைக்குண்டு:
தமிழகத்தில் வன உரிமை சட்டம் 2006- முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதுவரை வன நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற அனுமதிக்கமாட்டோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார் .
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம்மேகமலை மற்றும் தும்மக்குண்டு ஊராட்சிக்குஉட்பட்ட மலை கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வனப்பகுதியில் வசித்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளத்தை சேர்ந்த நபர் ஒருவர் வெள்ளிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன்பு தீர்ப்பு வெளியானது. அதில் வெள்ளிமலை வனப்பகுதியில் வசிக்கும் வன மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு உடனடியாக வெளியேற்ற மாவட்ட வனத்துறை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவிற்கு தடை கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஆடி மாதத்தில் பயிர் சாகுபடி செய்ய முயன்ற விவசாயிகளை வனத்துறையினர் தடுத்து வருகிறார்கள். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. வழக்குத் தொடர்பான விஷயங்களை மக்களிடம் விளக்கவும், வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளியன்று கடமலைக்குண்டு வன விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல
இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது:-
தேனி மாவட்டம் வருஷநாடு வன விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக வனத்துறை அமைச்சர்ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிமலை வனப்பகுதியில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருபவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கிடையாது. 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப் படி அவர்கள் வனப்பகுதியில் விவசாயம் செய்ய முழு உரிமை உள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாகத் தயார் செய்து விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மறு சீராய்வு செய்யவும், வருஷநாடு வன நிலப்பிரச்சனை தொடர்பாக உள்ள எல்லா வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தனது தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
மூன்று தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வனத்துறை வெளியேற்ற முயற்சி செய்கிறது. வன உரிமை சட்டம் முழுமையாக அமலாகும் வரை விவசாயிகளை வன நிலங்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சங்கம் அரணாக நின்று மக்களைப் பாதுகாக்கும். இறுதித் தீர்ப்பு வரும் வரை மலைக்கிராம மக்களுக்கு வனத்துறையினர் இடையூறு அளித்தால் மிகப் பெரிய அளவிலான போராட்டங்களை விவசாயிகள் சங்கம் நடத்தும. விளைநிலங்களுக்குள் அத்துமீறிநுழையும் வனத்துறையினரை தடுத்து நிறுத்தவேண்டும். விவசாயிகள் தங்களுக்குச் சொந்த மான நிலத்தில் உழுது பயிர் செய்யலாம். வனத்துறையினர் போடும் வழக்குகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சட்டப்படி சந்திக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயம் செய்ய முடியாத நிலை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் பேசுகையில், “கடமலைக்குண்டு ஒன்றியத்தில் எட்டு ஊராட்சிகளில் வனத்துறையினரால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி 18 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் கலந்துகொண்டு வன விவசாய நிலங்களுக்கு வன உரிமை சட்டம் 2006-இன் படி பட்டா வழங்கக் கோரி தீர்மானம்நிறைவேற்ற வேண்டும். வருஷநாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றார் .கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். போஸ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்டச் செயலாளர் கண்ணன், எஸ்.சஞ்சீவிகுமார், தயாளன் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் மணவாளன், மேகமலை ஊராட்சித் தலைவர் பால் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசரடி இந்திராநகர், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.