tamilnadu

img

மலை மக்களை வஞ்சிக்கும் வனத்துறை சாலை மறியல்-முற்றுகை....

தேனி:
தேனி மாவட்டம் கடமலை-மயிலைஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கண்டமனூர், மேகமலை, வருஷநாடு என மூன்று வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

இந்த வனப்பகுதியில் இந்திராநகர், அரசரடி, நொச்சிஓடை,  பொம்மராஜபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. மலைக்கிராம மக்கள் வனப்பகுதியில் பீன்ஸ், எலுமிச்சை, தக்காளி உள்ளிட்ட விவசாயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சிலஆண்டுகளாக மலைக்கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 4-ஆம் தேதி  அரசரடி மலைக்கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மலைக்கிராம விவசாய நிலங்களில் உள்ள டீசல் மோட்டார்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளது. எனவே அனைவரும் தாமாக முன்வந்துடீசல் மோட்டார்களை அகற்றி வனச்சரகஅலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். மக்கள் யாரும்டீசல் மோட்டார்களை கொடுக்கவில்லை.இதையடுத்து சனிக்கிழமை மாவட்ட வன உயிரின துணைக் காப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வனச்சரகர்கள் ஆறுமுகம், சதீஷ்கண்ணன் மற்றும் மேகமலை, வருசநாடு வனத்துறையினர் மலைக்கிராமங்களில் உள்ள டீசல்மோட்டார்களை அப்புறப்படுத்துவதற் காக வந்திருந்தனர். 

வனத்துறையினர் வந்திருப்பதை அறிந்த மலைக்கிராம மக்கள் மஞ்சனூத்து சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து  வனத்துறையினரும் காவல்துறையினரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேகமலை ஊராட்சித் தலைவர் பால்கண்ணன், “மலைக்கிராம மக்களை வெளியேற்ற நினைக்கும் வனத்துறையினர் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்றுவழிமுறைகள் எதுவும் செய்யவில்லை. டீசல் மோட்டார்களை அகற்றினால் மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். வனத்துறையினர் தங்களது நடவடிக்கையைக் கைவிட வேண்டும்” என்றார். சுமார்மூன்று மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் வனத்துறையினர் திரும்பிச் சென்றனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
 “மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து வனவிவசாயிகள்  சென்னை உயர் நீதிமன்றமதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந் துள்ளனர்.  வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இறுதித் தீர்ப்பு வரும்வரை வனத்துறையினர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்டச்செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எல்.ஆர்.சங்கரசுப்பு, கே.ராஜப்பன் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.