tamilnadu

ஆண்டிபட்டியில் பிடிபட்டது அதிமுக பணம்

தேனி ,ஏப்.17- ஆண்டிபட்டியில் பிடிபட்ட பணத்திற்கும் அமமுகவிற்கும் சம்பந்தம் இல்லை. அ.தி.மு.க பிரமுக ருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேண்டுமென்றே பணத்தை வைத்து எங்களை சிக்க வைக்க அ.தி.மு.க சூழ்ச்சியில் ஈடுபட்டதாக தேனி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார் .ஆண்டிபட்டியில் அவர் செய்தி யாளர்களிடம் மேலும் கூறியதாவது:ஆண்டிபட்டியில் அ.தி.மு.க பிரமுகருக்கு சொந்தமான வணிகவளாகத்தில் ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரின் அ.ம.மு.க ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று அந்தவணிக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திரூ. 1 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க பிரமுகருக்கு சொந்தமான கட்டிடத்தில் நாங்கள் ஏன் பணத்தை வைக்கப் போகிறோம். இது எல்லாமே அ.தி.மு.கவினரின் திட்டமிட்ட சதியாகும். எங்கள் மீது பழிசுமத்த திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் ஆகும். அ.தி.மு.கவினர் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் ஆதரவோடு தலா ஆயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா செய்கின்றனர். 


இதுவரையில் தேனி மாவட்டத்தில் மட்டும் 150 கோடிரூபாய் பணம்அ.தி.மு.க சார்பில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தாத போலீஸ், இப்போது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? இது அரசு அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் தெரியும். இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்திடமும், தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியரிடமும் பலமுறை புகார் கொடுத் துள்ளேன். ஆனால் இதுவரை என் புகாரில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? வருமான வரித் துறையினர் திட்டமிட்டு நாடகமாடி, வேண்டுமென்றே ஒரு நபரை அப்ரூவராக மாற்றியுள்ளனர். அ.தி.மு.கவினரின் அராஜகச் செயலுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. போலீசார் பொய்யான வழக்கை போட்டு எங்கள் கட்சியினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவின் போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் எங்கள் கட்சியினரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் சொல்வது மட்டுதான் நடக்கிறது. தோல்வி பயத்தால் அ.தி.மு.க செய்த திட்டமிட்ட சதியாகும். இதனால் எங்கள் தேர்தல் பணியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றார்.பேட்டியின் போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.