தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாட்டைச் சேர்ந்தவர். அய்யப்பன். இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஓட்டல் விரிவாக்கத்துக்காக, ‘எக்விடாஸ்' என்ற தனியார் நிதி நிறுவனத்தில், 2019 ஆம் ஆண்டு, 25 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். மாத தவணையாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.
கொரோனா முதல் அலை ஊரடங்கால், கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்தனர். அதிராம்பட்டினம் போலீசில் அய்யப்பன் புகார் அளித்தார். போலீசார் தலையிட்டு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொள்ள தெரிவித்தனர். இதன்படி, அய்யப்பன் கட்டி வந்து உள்ளார். தற்போது இரண்டாவது அலை ஊரடங்கால், மீண்டும் தொழில் முடங்கியது. கடன் தொகையை செலுத்த முடியவில்லை.நிதி நிறுவனத்தினர், அய்யப்பன் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த அய்யப்பனின் தாய் தமிழரசி(50), கடந்த ஜூன் 18 ஆம் தேதி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி திங்களன்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.