தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இவ்வாண்டு நெல் குறுவை சாகுபடி இலக்காக 43,225 ஹெக்டேர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 13,480 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதைகள் தற்போது வரை 183 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 270 மெ.டன் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைத்திட வேண்டும். குறுவை பருவத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை முழு மையாக அடையவும், குடிமராமத்து பணிகளை துரிதப் படுத்தி தூர்வாரும் பணிகளை ஜூன் 10 ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும் என வேளாண், பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் அறிவுறுத்தி உள்ளார்.