தஞ்சாவூர்:
கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் 15 நள்ளிரவு தொடங்கி மறுநாள் நவ.16 அதிகாலை 6 மணி வரை வீசிய கஜா புயல் பல உயிர்களை பலிகொண்டும், லட்சக்கணக்கான தென்னை, வாழை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகை மரங்களை வேரோடு சாய்த்தும், ஆயிரக்கணக் கான விசைப்படகுகளை கடலில் தூக்கி வீசியும்,பல ஆயிரம் குடிசை, ஓட்டு வீடுகளை கபளீ கரம் செய்தும் ஓய்ந்தது. கஜா புயல் தாக்கி ஓராண்டு கடந்த நிலையிலும், அதன் தாக்கம் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் மனதில் ஆறாத ரணமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். அதிலிருந்து மீண்டு வர இன்னும் போராடிக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 16 அன்று வீசிய கஜா புயல் தாக்கி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் போயின. இதனால் தென்னை விவசாயிகளும், அதனை சார்ந்திருந்த தொழிலாளர்களும் இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தென்னை விவசாயிகள்
இது குறித்து குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயி எம்.தமிழ்செல்வன்கூறுகையில், “பேராவூரணி பகுதியில் 40 ஆண்டுகளாய் தென்னை சாகுபடியை மட்டுமே நம்பி இருந்தோம். ஆண்டுக்கு சுமார் 4 முறை வெட்டு இருக்கும். (தேங்காய் பறிக்கப்பட்டு) உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. இதனால் நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால், ஒரே நாளில் அனைத்து தென்னை விவசாயிகளையும் கஜா புயல் நிலைகுலைய வைத்துவிட்டது. தற்போது புயலுக்கு பிறகு மீதமுள்ள தென்னை மரங்கள் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் போல, மலட்டுத் தன்மையால், காய்கள் இன்றி நிற்கிறது. காய்த்தாலும், தேங்காயில் உள்ள பருப்பு முன்பு போல திரட்சி இல்லாததால், முன்பு போல விலை கிடைப்பது இல்லை. சேதமடைந்த மரங்களை பெரும் பாடுபட்டு அகற்றினோம். தற்போதும் ஏராளமான சாய்ந்த மரங்கள் அகற்றப்படாமல் தோப்பிலேயே கிடக்கிறது. சாய்ந்த தென்னை மரக்கன்றுகளை மீண்டும்நட்டு வருகிறோம். எப்படியும் இந்த மரங்கள்காய்ப்புக்கு வருவதற்கு ஐந்தாறு ஆண்டுகள்ஆகும். அதுவரை வெகு சிரமத்துக்கிடையே தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்”என்றார்.குருவிக்கரம்பை நாகராஜன் கூறுகையில்,“புயலில் விழுந்த தென்னை மரங்களை அகற்றியது போக, மீதமுள்ள மரங்களை அகற்ற ஆள் பற்றாக்குறையால், ஒரு சில இடங்களில் ஓராண்டு கழித்தும் இன்னும் அகற்றப்படாமல் கிடக்கிறது. சிலர் இப்போது தான் அகற்றி வருகிறார்கள். இதில் கொடுமையான விசயம், அறுக்கப்பட்ட மரங்கள் சாலையோரங்களில், நீர்நிலைகளில் அப்படியே கிடக்கிறது” என்றார்.பேராவூரணியைச் சேர்ந்த மா.கணபதி, ‘‘கஜா புயலுக்குப் பின்னர் தேங்காய் விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால் கயிறு தொழிற்சாலைக்கு மூலப் பொருளான தென்னை மட்டைகள் கிடைக்காமல், கயிறு தொழிற்சாலைகள் முடங்கிக்கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. அரசு கயிறு தொழிற்சாலைகளை சீரமைக்க வங்கி கடனுதவி வழங்க வேண்டும்” என்றார்.
தவிக்கும் மீனவர்கள்
தஞ்சை மாவட்டத்தில் 36 கடலோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்களும், மீனவக் குடும்பத்தினரும் வீடுகளையும், படகுகளையும் இழந்து பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மீன்பிடி துறைமுகமான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கள்ளிவயல் தோட்டத்தில் கஜாவிற்கு முன்பாக, 240 விசைப்படகுகள் இருந்த நிலையில்தற்போது 134 படகுகள் மட்டுமே உள்ளன. இதைபோல நாட்டுப் படகுகள் ஆயிரத்திற்கும் மேல்இருந்ததில், தற்போது வெகுவாக குறைந்து விட்டன.இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜூதீன் கூறுகையில், “புயலில் சேதமடைந்த விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை இன்னமும் சீரமைக்க முடியாமல் உள்ளனர். அதற்காக அரசு வழங்கிய நிவாரணம் என்பது சொற்பமே, மீனவர்கள் சிலர் தொழிலை மாற்றி விட்டு, கோவை, திருப்பூருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புயலுக்கு பிறகு கடலில் மீன் வளமே குறைந்து விட்டது, முன்பு போல கடலில் மீன்கள் கிடைப்பது இல்லை. இதனால் பல்வேறு துணைத் தொழில்கள் பாதிக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்” என்றார்.
அறிவிப்போடு நின்ற ‘1 லட்சம்’ வீடுகள் திட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு செயல்பாடு இன்றி உள்ளது. மேலும் மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்து அறிவிப்பும் அப்படியே உள்ளது. இதனால் பல குடிசை வீடுகள் நிவாரணத்திற்கு வந்த தார்ப் பாய்களை கூரையாக போர்த்திய நிலையில் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன.
அதிகாரிகள் சொல்வது என்ன?
ஆனால், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலின் போது 17 பேர் மரணமடைந்தனர். இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 36 லட்சத்து 99 ஆயிரத்து 197 தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது. ஒரு தென்னை மரத்துக்கு ரூ.1100 இழப்பீடாக ரூ.409 கோடியே 28 லட்சத்து 16 ஆயிரத்து 700 வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 179 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் பாதிப்பு எனக் கணக்கிட்டு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி வட்டங்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 766 குடும்பத்துக்கு 27 வகையான நிவாரணப் பொருட்களும், தலா ரூ. 5 ஆயிரம் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1157 விசைப்படகுகள், நாட்டுப் படகுகளும், 1193 இன்ஜின்களும், 1497 மீன்பிடி வலைகளும் சேதமானதாக கருதி ரூ.14 கோடியே 70 லட்சத்து 55 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டக் கலைத்துறை, கால்நடைத்துறை உள்பட பல்வேறு இழப்பீடுகளை கணக்கெடுத்து கஜா புயல் பாதிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வரை நிவாரண நிதியும், இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (ந.நி)