தஞ்சாவூர்:
தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் உள்ள ஓலைச் சுவடிகளை மின்னுருவாக்கம் செய்யும் பணி தற்போது பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று நடைபெறுகிறது என பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது,
“இலண்டன் பிரிட்டிஷ் நூலகம், ENDANGERED ARCHIVES PROGRAMME மூலம் 51,040 பவுண்ட் (இந்திய மதிப்பு ஏறக் குறைய 48 இலட்சம்) பெற்று, தமிழ் ஓலைச்சுவடிகளில் ஒரு பகுதியை மின்னுரு வாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெறுகிறது. இதற்காக இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து முதல் தவணைத் தொகையாக ரூபாய் 18,50,000 பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை இரண்டாண்டுகளில் முடிக்கத் திட்டமிடப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு மின்னூலக திட்டத்தின் மூலம் தமிழ்ச் சுவடிகளில் மற்றொரு பகுதியை மின்னுருவாக்கம் செய்யும் பணியும் நடைபெறுகிறது. புது தில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம் மூலம் தமிழ் மொழிச் சுவடிகள் அல்லாத சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட ஏனையமொழிச் சுவடிகளை மின்னுருவாக்கம் செய்வ தற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவ்வாறு மின்னுருவாக்கம் செய்யப்பெற்ற சுவடிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ளீடு செய்து ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுவடிகளைப் பாதுகாப்பதற்கு புதுதில்லி தேசியச் சுவடிகள் இயக்ககம், தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஆண்டு தோறும் ரூபாய் ஏழு இலட்சம் நிதி வழங்கி, சுவடிகள் பாதுகாப்பு மையத்தினை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.