தஞ்சாவூர், மே 19- ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை ஒன்றியக்குழு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி ஊராட்சி கீழ எல்லைக்கால் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ ஆகியோர் விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
நிகழ்ச்சியில், சிபிஎம் கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், செங்கிப்பட்டி ஊராட்சி தலைவர் சித்ரா கார்த்திக், துணைத் தலைவர் வசந்தா (சிபிஎம்), திருமலைசமுத்திரம் ஊராட்சி தலைவர் டி.வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் சங்கம் பி.சங்கிலி முத்து, தையல் தொழிலாளர் சங்கம் வனரோஜா, விதொச ஒன்றிய துணைத் தலைவர் எல்.ராமராஜ், கிளை நிர்வாகிகள், சக்திவேல், மோகன், முருகன் கலந்து கொண்டனர். பின்னர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இச்சூழலில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்” என்றார்.