தஞ்சாவூர் : கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிபதி சிவஞானம் தலைமையில் புதன்கிழமையன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி சிவஞானம் கேட்டறிந்தார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் ஆட்டோக்கள் மூலம் ஒலிபெருக்கிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வேலை செய்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்த 240 பேர் 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களில் 97 பேருக்கு கண்காணிப்பு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 143 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். குமுதா லிங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.