tamilnadu

img

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மனைவி கௌரவாம்பாள் காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி

தஞ்சாவூர், ஏப்.4- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி கௌரவாம்பாள்(79) புதனன்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் கவிஞரின் மனைவி கௌரவாம்பாள் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஏப்.3-ம் தேதி அன்று இரவு காலமானார். அம்மையாருக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற குமாரவேல் என்ற மகன் உள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணைப் பொதுச்செயலாளர் க.பிரகதீஸ்வரன், களப்பிரன்,மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்டச்செயலாளர் இரா. விஜயகுமார், பொருளாளர் முருக.சரவணன், பட்டுக்கோட்டை கிளைச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை, நிர்வாகிகள் தி.தனபால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.கௌரவாம்பாள் உடலுக்கு தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், ஆர்.காசிநாதன், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகே.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்க குட்டி என்ற சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் இறுதிநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 


கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மக்கள்கவிஞரின் துணைவியார் கௌரவாம்பாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். பொதுவுடமை இயக்கத்தை மிகவும் நேசித்த அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார்.


தமுஎகச அஞ்சலி

தமுஎகச மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கடந்த 40 ஆண்டுகளாக பட்டுக்கோட்டையில் தமுஎகச நடத்தி வரும் மக்கள் கவிஞர் பிறந்த நாள் விழாவில் தொடர்ந்து பங்கேற்று வந்தவர் திருமதி கௌரவாம்பாள். தமுஎகச கலைஞர்களை தன்னுடைய பிள்ளைகளைப் போலவே கொண்டாடியவர் அவர். கௌரவாம்பாளின் மறைவுக்கு தமுஎகச தனது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.