தஞ்சாவூர், மே 31- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், வீரியங்கோட்டை ஊராட்சி கைலான்குளத்தை தூர்வாரி, தண்ணீர் நிரப்பித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி - சேதுபாவாசத்திரம் செல்லும் சாலையில் உள்ள இக்குளத்தில் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் போது, விழுந்த தென்னை மரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆனாலும் மரங்கள் முழுவதும் எரியாமல் 500 க்கும் மேற்பட்டவை துண்டு, துண்டாக கிடக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு முக்கிய பாசனமாகவும், இப்பகுதிக்கு அடிப்படை நீராதாரமாகவும் விளங்கிய கைலான்குளம் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே, கைலான்குளத்தில் கிடக்கும், தென்னை மரங்களை அகற்றி, தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, வரத்து வாரிகளை சரி செய்து, தண்ணீர் நிரப்பித் தர வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.