தஞ்சாவூர், ஏப்.22- தஞ்சையில் சிறுவனை கொ லை செய்து புதைத்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(43), மருந்து விற்பனையாளர். இவரது இரண்டாவது மகன் கிஷோர்(11), 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோரை காணவில்லை. இது தொடர்பாக மறுநாள் கிஷோரின் தாயார் கவிதா கொடுத்த புகாரின் பேரில் தமிழ் பல்கலைக்கழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கா ணாமல் போன கிஷோரை தேடி வந்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(21) டிப்ளமோ படித்தவர், கிஷோரை கொலை செய்து விட்டதாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தான். விசாரணையில், அரவிந்த் அப்பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மறைவில் சிகெரட் பிடித்துக் கொண்டு இருந்த நிலையில், அங்கு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த கிஷோர், சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்து விட்டு வீட்டில் சொல்லி விடுவேன் என கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரின் கழுத்தை நெரித்துள்ளான். அப்போது கிஷோருக்கு வலிப்பு நோய் இருந்த நிலையில் மயங்கியுள்ளான். பயத்தில் அரவிந்த், இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள மனையில் குழியை தோண்டி புதைத்ததை ஒப்புக் கொண்டான். மேலும், தனது வீட்டு அருகே புதைத்து இருந்த இடத்தையும் காண்பித்தான். இதை தொடர்ந்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் சிறுவன் உடலைத் தோண்டி எடுத்தனர். இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், கொலையாளி அரவிந்துக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், கொலை குற்றத்தை மறைத்ததால் 7 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டும், தண்டனை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் தீர்ப்பளித்தார்.