tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் காரங்குடா அரசுப் பள்ளி கட்டிடம்!  

தஞ்சாவூர்: ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். அதேபோல எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள சத்துணவு மையக் கட்டிடத்தையும் புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் காரங்குடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இப்பகுதியில் பெரும்பாலும் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஏற்கனவே 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.  இதனால் இக்கட்டிடம் பூட்டப்பட்டு, அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வகுப்பறை கள் நடைபெற்று வருகிறது. ஒரு தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் உள்ளனர். கட்டிடத்தின் மேற்கூரை இடிந்தும், கட்டிடம் வலுவிழந்தும் உள்ளது. கடற்கரை உப்புக்காற்றின் தாக்கத்தால் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  மேலும், இந்த வளாகத்தில் சத்துணவு மையமும், சமையலறையும் உள்ளது. சமையலறையும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. சமையலறைக்குள் உள்ள பொருள்கள் வைப்பறையில் பெருச்சாளிகள் தரையில் துளையிட்டு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை தின்று சீரழிக்கின்றன. எலிகளின் எச்சம் உணவுப் பொருட்களில் கலந்து, இதனை உண்ணும் மாணவர்களின் உடலுக்கு உபாதைகளையும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளது. பள்ளியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவரும் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளது.  சேதமடைந்த பள்ளிக் கட்டிடம், சத்துணவு மைய சமையலறை பகுதியில், ஓய்வு நேரங்களில் இங்கு வந்து விளையாடும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு மைய பணியாளர்க ளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் கூறுகையில், “ஆபத்தான பள்ளிக்கட்டிடம், சமையலறை, பள்ளிச் சுற்றுச்சுவர் ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.