tamilnadu

img

விவசாயக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு விவசாயிகள் மீதான தாக்குதல்... பெ.சண்முகம் கண்டனம்

தஞ்சாவூர்:
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் சரோஜ் நினைவகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஜனவரி 8 ஆம் தேதி விவசாயிகளின் மிகமுக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் கிராமப்புறங்களில் பொது வேலை நிறுத்தம் செய்வது என அகில இந்திய அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை தமிழகத்தில் அமலாக்குவது சம்பந்தமாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஜனவரி 8 ஆம் தேதி 500 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல்மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கைப்படி, உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதமான விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்மத்திய மோடி அரசு, இதனை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, விவசாயிகள் பிரச்சனைகளை மட்டுமே விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் தற்கொலையை தடுக்கவும், அவர்களை கடனில் இருந்து மீட்டெடுக்கவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆனால், அதற்கு மாறாக மத்திய அரசு ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கி வந்த வட்டி மானியம் 4 சதவீதத்தை ரத்து செய்து, வட்டி வீதத்தை உயர்த்தி அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு உடனே இதனை கைவிட வேண்டும். இதே போலவிவசாயிகளுக்கு நகைக்கடன் வட்டியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதையும்ரத்து செய்ய வேண்டும். 7 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதமாக உயர்த்தி அதிகரித்திருப்பதை விவசாயிகள் மீதான ஒரு தாக்குதலாகத் தான் கருத வேண்டியுள்ளது. வட்டிஉயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கான கடன்களை ஒரு முறை ரத்து செய்ய வேண்டும்.

செயல்படுத்தாதற்கு மத்திய அரசு விருதா?
விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகளுக்கு உதவிகரமாக பயன்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சொற்பக் கூலியே வழங்கப்படுகிறது. சட்டப்படியான கூலி வழங்கப்படுவதில்லை. அதை ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இந்நிலையில் தமிழக அரசுக்கு, மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தாதற்கு விருது வழங்கப்பட்டுள்ளதா என்பதே எங்களுடைய கேள்வி.
பயிர்க் காப்பீடு என்பது விவசாயிகளுக்கு பயனளிப்பதை விட, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் பயனளிப்பதாக உள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை ஆண்டு நிறைவுறும் நிலையிலும், இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனை தமிழக அரசு பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே இதற்கான உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அதனால் தான் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கு தயங்குகின்றனர். எனவே,  விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை அரசு பெற்றுத் தர வேண்டும். கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

அஞ்சல் அட்டை இயக்கம் 
அகில இந்திய வேலை நிறுத்தத்தில் 250 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்கலந்து கொள்கின்றன. இந்த கோரிக்கைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் விதமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத இடங்களில், டிசம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் நடத்துவது, ஜனவரி 3, 4, 6 ஆகிய தேதிகளில், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிறைவேற்றித் தர குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என வலியுறுத்தி இலட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகளை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்கள் பி.செந்தில்குமார்,  வீர.மோகன், அகில இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் ஏ.ரெங்கசாமி, தாளாண்மை உழவர் இயக்கம் அமைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழக விவசாயிகள் சங்கம் விஸ்வநாதன், சிபிஐ (எம்.எல்) விவசாயிகள் சங்கம் குணசேகரன், அகில இந்திய விவசாய இயக்கம் வழக்கறிஞர் குருசாமி மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.