தஞ்சாவூர்:
கொரோனா ஊரடங்குகளை தளர்த்தி, இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கோரி தஞ்சாவூரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ரயிலடியில், தஞ்சாவூர் மாவட்ட அனைத்து மேடை மற்றும் நாட்டுப்ப்புற கிராமிய கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பாடகி சின்னப்பொண்ணு, குமார் தலைமையில் தப்பு,மேளம் இசைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கோவில்திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இதை நம்பியுள்ள கலைஞர்கள் மற்றும்அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு ள்ளதால், ஊரடங்குகளில் தளர்வு அளித்து இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், நடன நையாண்டி மேள சங்கம் மற்றும் அனைத்துகலைச் சங்கங்களின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.அந்த மனுவில், “கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள தால், தமிழகம் முழுவதும் இதை நம்பியுள்ள 4 லட்சம் கலைஞர்களும், 6 லட்சம் குடும்பத்தினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய அனுமதியை வழங்க வேண்டும்.
கலை பண்பாட்டுத் துறையில் உறுப்பினராக சேர்க்கப்படாத கலைஞர்களை உடனடியாக உறுப்பினர்களாக சேர்த்து, உறுப்பினர் அட்டை வழங்கி மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு கலைஞர்களை பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதன் மூலம் கலைஞர்களின் வருமானத்துக்கு வழிவகுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
****************
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாட்டுப்புறக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதம் முதல்பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டதால், கோயில்கள் மூடப்பட்டு திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், நாட்டுப்புறக் கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தை, மாசிமாதங்களில் கோயில் விழாக்கள் மூலம்நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓரளவுக்கு வேலைவாய்ப்பும், வருவாயும் கிடைத்து வந்தது.இந்நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் கோயில் விழாக்களுக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. இதனால், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் குடும்ப அட்டை அடிப்கடையில் தலா ரூ. 20,000 நிவாரணம் வழங்க வேண்டும், ஊரடங்கு முடியும் வரை நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அரசே பொறுப்பேற்று கொள்ள வேண்டும், இசைக்கருவிகள் பழுது நீக்கரூ.2லட்சம் வழங்க வேண்டும், தமிழக திருவிழாக்களில் செண்டை மேளம் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் மற்றும் தமிழன்டா கலைக்கூடம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க நாட்டுப்புற கலைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.