தஞ்சாவூர் :தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த மணக்காடு கிராம பொதுமக்கள் சார்பாக ஆறுமுகம் என்பவர், தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “பேராவூரணி தாலுகா, மணக்காடு கிராமத்திலிருந்து மேற்பனைக்காடு செல்லும் சுமார் 2 கி.மீ தூரம் உள்ள இணைப்புச் சாலை உள்ளது. இந்த தார்ச்சாலை கப்பிகள் பெயர்ந்து மழை காலத்தில் நடவு வயல் போல் காட்சியளிக்கிறது. இந்த சாலையில் அறந்தாங்கியிலிருந்து கீரமங்கலம், மேற்பனைக்காடு வழியாக மேல மணக்காட்டுக்கு காலை, மாலை என இரு முறை அரசு பேருந்து வந்து செல்கிறது. அதே போல் மதியம் ஆலங்குடியிலிருந்து கீரமங்கலம், மேற்பனைக் காடு வழியாக மேல மணக்காடு அரசு பேருந்து வந்து செல்கிறது. இது அல்லாமல் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள், விவசாய வாகனங்கள் என இந்த சாலையில் தான் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலை மிகவும் பழுதடைந்து, போக்கு வரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. எனவே இந்த சாலையை பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த ஏதுவாக 2 கி.மீ தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைத்து தர ஆவன செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.