தஞ்சாவூர் ஆக.3- ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அன்று தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ திருநாவுக்கரசு தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயி கள் சங்க (சிபிஐ) மாவட்ட நிர்வாகி கள் வீரமோகன், கல்யாண சுந்தரம், பாஸ்கர், தமிழர் தேசிய முன்னணி அயனாவரம் சி.முருகேசன், ஜனநாயக விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அருணாசலம், சமவெளி விவசாயிகள் சங்கம் சு.பழனிராஜன், தமிழக விவ சாயிகள் சங்கம் கக்கரை சுகுமாரன், விவசாய சங்க தலைவர் அருண்சோரி, திமுக விவசாய அணி நேதாஜி, விவசாயிகள் கருணாகரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என பொதுமக்கள், விவசாயி கள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டாவை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆற்றுப் படுகை, விவசாய நிலங்களில் மணல் மாபியாக்கள் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபடுவதால், விவசாயம், குடி தண்ணீர் பாதிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக.15 க்குப் பிறகு டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து பேசி, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்வது” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.