தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆட்சியகர் ம.கோவிந்தராவிடம், மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு அமைக்கப்பட்ட மணல் குவாரியை செயல்படுத்த வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என்.பேர்நீதி ஆழ்வார் ஆகியோர் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: “தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கொள்ளிடம் ஆற்றில் தேவனோடை கிராமத்தில் அமைந்துள்ள மணல் குவாரியில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்பட்ட அனுமதியை அமல்படுத்த வேண்டும். கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி பகுதியில் அமைந்துள்ள மாட்டுவண்டி மணல் குவாரியை உடனே திறந்திட வேண்டும். திருவிடைமருதூர் தாலுகாவுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி தொழிலாளர்கள் காலங்காலமாக ஆற்றில் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். லாரிகளில் சட்டவிரோ தமாக மணல் கடத்தல் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ.29ஆம் தேதி கும்பகோணத்தில் மாட்டு வண்டியுடன் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.