tamilnadu

img

தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று..... பள்ளிக்கு இரண்டு வாரம் விடுமுறை....

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிக்கு இரண்டு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, 1,100 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டதால் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கடந்த மார்ச் 11 ஆம் தேதி பள்ளியில் பயிலும் 460 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மார்ச் 12 ஆம் தேதி மாணவிகள் 619 பேருக்கும் ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 18,345 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 17,920 பேர் குணமடைந்துள்ளனர். 256 பேர் உயிரிழந்துள்ளனர். 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.