ரூ.500 கோடி மதிப்பில் நீர் நிலைகளை சீரமைக்க அரசு தொடங்க உள்ள குடிமராமத்து பணிகளில் ஈடுபட விவசாயிகள் ஆர்வமாக உள்ளார்கள். ஆளுங்கட்சி தலையீட்டை தவிர்த்து குடிமராமத்து பணிகளை உள்ளூர் விவசாயிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் டெல்டா விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
‘குடிமராமத்து’ என்பது தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட நீர் மேலாண்மைத் திட்டமாகும். 2018-19-ல் குடிமராமத்து பணிக்காக தமிழக அரசு ரூ.328 கோடி ஒதுக்கியது. இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பங்களிப்பாக 10 சதவீதம் இருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட பணிகளில் நேரடி மனித உழைப்பு டிராக்டர்களை பயன்படுத்துதல் மூலமாகவும் பங்கேற்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
குடிமராமத்து பணிகளை சம்பந்தப்பட்ட பாசன விவசாயிகள் சங்கம் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டில் பொதுப் பணித்துறையினர் போலி விவசாய சங்கங்கள் பெயரில் ஆளும் கட்சி ஒப்பந்ததாரர்களிடமே பணிகளை ஒப்படைத்துவிட்டனர். இதனால் குடிமராமத்து பணிகள் சரிவர நடக்கவில்லை. பல பகுதிகளில் தூர்வாரப்படாமலேயே பணிகள் நிறைவு செய்யப்பட்டு விட்டதாக பணம் பட்டுவாடா நடந்துள்ளது என விவசாயிகள் அப்போது குற்றம் சாட்டினர்.
இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக தஞ்சை மாவட்டத்துக்கு 117 பணிகள் மேற்கொள்ள ரூ.20.3 கோடியும் திருவாரூர் மாவட்டத்துக்கு 95 பணிகள் மேற்கொள்ள ரூ.16.4 கோடியும் நாகை மாவட்டத்துக்கு 82 பணிகள் மேற்கொள்ள ரூ.16.6 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளைபோல் இல்லாமல் குடிமராமத்து பணிகள் இந்த ஆண்டு உள்ளூர் விவசாயிகளின் நேரடி பங்கேற்புடன் நடக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் தெரிவிக்கின்றனர். முப்போகம் விளைய வசதியாக தங்கள் பகுதியில் நடக்க இருக்கும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளில் தாங்களும் ஈடுபட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.ஆனால், பாசனதாரர் சங்கங்கள் அமைத்து அதில் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஆளும் கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டு மற்றவர்கள் ஒப்புக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். ஆளும் கட்சியினரை எதிர்த்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசு அதிகாரிகளே ஒதுங்கிக் கொள்கின்றனர். எனவே ஆளும் கட்சியினரிடம் ஒத்துப்போகுமாறு விவசாயிகளிடம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றனர் என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.ஒட்டுமொத்தமாக குடிமராமத்து பணி 51 சதவீதம் நடந்தாலே போதும் என்று விவசாயிகள் எண்ணவேண்டிய நிலையில்தான் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு போலவே ஆளுங்கட்சி காரர்களின் தலையீடுகள் காரணமாக குடிமராமத்துப்பணியில் பெரும் முறைகேடு துவங்கியுள்ளது. இது தொடர்ந்தால் பொதுப்பணித்துறையின் போக்கை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்றும் பல்வேறு தரப்பு விவசாயிகள் கூறிவருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் 10 கிராமங்களுக்கு ஒரு கிராமத்தில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. குளம், ஏரிகளை ஆழப்படுத்தாமல் கரையோரம் மட்டும் சுரண்டி கரையை கட்டுகின்றனர். குடிமராமத்து பணி என்ற பெயரில் ஆளும் கட்சியினர் சம்பாதிக்கின்றனர். இந்த பணிகள் மூலம் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பணிகள் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க விவசாயிகள் கொண்ட ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குடிமராமத்துப் பணி நிறைவடைந்ததும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கேட்கிறார்கள். ஆனால் அவ்வாறு அரசு வெளியிடுவதில்லை. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும் அதை முறையாக பயன்படுத்தும் நிலையில் தமிழகம் இல்லை. உய்யக்கொண்டான் கட்டளை மேட்டு வாய்க்கால் சீரமைப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால்கூட உரிய பதில் கிடைப்பதில்லை என்றும் தஞ்சை விவசாயிகள் குமுறுகின்றனர்.
ஏற்கனவே பணிகள் நடந்த இடத்திலேயே மீண்டும் பணி நடக்கிறது. குறிப்பாக கோனேரிராஜபுரம் வாய்க்கால் மூலம் 145 ஏக்கர் பாசனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 40 ஏக்கர் பரப்பளவு பாசனத்துக்கு கூட தண்ணீர் பாயாத நிலை உள்ளது. இந்த வாய்க்காலை குடிமராமத்து பணியில் சேர்க்க வேண்டும் என்று 2010-ம் ஆண்டில் இருந்து முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இது வரை குடிமராமத்து பணியில் சேர்க்கப்படவில்லை. குடிமராமத்து பணியால் நீர்நிலைகளில் நீர் ஓடுவதற்கு பதிலாக ஊழல்கள்தான் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று நாகை மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.குடிமராமத்து என்பது அரசு கையில் எடுத்தபோது, ஆரம்பத்தில் ஒப்பந்ததாரர்களே 10 சதவீத நிதி பங்களிப்பை செலுத்தி பணி மேற்கொண்டனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளை கொண்ட பாசனதாரர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகள் தந்திரமாக விவசாயிகள் வேடத்தில் சங்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டனர் என்று திருவாரூர் மாட்ட மூத்த விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு எந்தக் காரணம் கொண்டும் குடிமராமத்து பணிகளை அரசியல் கட்சியினரிடம் ஒப்படைக்கக்கூடாது என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால் விவசாயிகள் வேடத்தில் ஆளும் அரசியல் கட்சியினர் உள்ளே வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் கல்லணை கோட்ட செயற்பொறியாளர்களிடம் கேட்டபோது, பாசனதாரர் சங்கம் மூலமாகத்தான் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது; ஆளும் கட்சியினர் தலையீடு கிடையாது; ஆயக்கட்டு வாரியாக கூட்டம் போட்டு பாசனதாரர் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அப்பட்டமாக பொய் சொல்கின்றனர். எனவே இந்தாண்டும் குடிமராமத்துப் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடும் அதிகாரிகளின் குளறுபடிகளும் ஒப்பந்ததாரர்களின் ஊழல்களும் தலைவிரித்தாடுவதை நேரடியாகப் பார்க்கமுடிகிறது. குடிமராமத்துப்பணி என்பது கடந்தாண்டு போலவே பம்மாத்தாகவே முடியப்போகிறது என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து அண்மையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்ததையொட்டி பாசன ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் விரைவாக வாய்க்காலின் தலைப்பு பகுதிக்கு வந்துசேரும். இன்னொருபுறம் இந்த வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்கிற சிறிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்வது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. தண்ணீர் திறந்துவிட்டதை காரணம் காட்டி தற்போது அவசரஅவசரமாக நடைபெறும் தூர்வாரும் பணி என்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நிறுத்துவதுடன் செலவிடப்படாத பாக்கித் தொகையை தனி கணக்காக வைத்திருந்து தண்ணீர் வராத காலத்தில் மீண்டும் தூர்வாரும் பணியை முறையாக மேற்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவசர அவசரமாக பணியை முடித்து தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையையும் தூர்வாரிவிட்டதாகவே கணக்குகாட்டி மேலும் பெரும் முறைகேடு நடைபெறுவதற்கு இது வாய்ப்பாக அமையும். எனவே வேளாண்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, இதில் உரியவாறு கவனம் செலுத்தி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.
===ஐ.வி.நாகராஜன்====
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்