tamilnadu

img

தலித் மக்களுக்கான பாதையை மறித்து மதுரை அருகே இன்னொரு தீண்டாமைச் சுவர்

மதுரை,ஆக.31-   மதுரை அருகே தலித் மக்களுக்கான கிராமப் பாதையை மறித்து,அவர்களது குடியிருப்புகளைச் சுற்றி, பொது இடத்தில் 800 மீட்டர் நீளத்தில் சாதி ஆதிக்கச் சக்தியினரின் ஆதரவுடன் தனிநபர் ஒருவர்  சுவர் எழுப்பியுள்ளார். இப்பிரச்சனையில் அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு,தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.சுப்பு லாபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட்  17 ஆம் தேதியன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் இறந்துள்ளார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய மயா னத்திற்கு கொண்டு சென்ற போது மழை பெய்துள்ளது. தலித் மக்களின் மயானத்திற்கு மேற்கூரை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் சண் முகவேலின்  சடலத்தை மழையில் எரிக்கவோ,புதைக்க வோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து தலித் மக்கள், ஆதிக்கச் சாதியினரின் ஊர் தலைவரை சந்தித்து இன்று ஒரு நாள் மட்டும் அவர்களது மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி  கேட்டுள்ளனர் . ஆனால் சாதி ஆதிக்கச் சக்தியினர் அனுமதிக்க மறுத்ததால் சடலத்தை சாலையின் அருகே வைத்து எரிக்கும் போது கடுமையான மழை பெய்ததால்  பாதி எரிந்த நிலையில் தார்பாயை வைத்து மூடியுள்ளனர்.பின்னர்  மழை நின்றவுடன் எரித்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது ஆதிக்கச் சாதியை சேர்ந்த ஆண்க ளும் பெண்களும் ஊரின் எல்லையில் தலித் மக்களை வழி மறித்து, என்ன தைரியம் இருந்தால் எங்களின் மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி கேட்பீர்கள் என்று கூறி, தாக்க முயற்சித்துள்ளனர். மேலும்  பேரை யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தலித் மக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதில் தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை யீட்டால் தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தலித் மக்கள் கொடுத்த புகார்  மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை மாவட்டச் செயலாளர் ம.பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் வி. சமயன் உள்ளிட்டோர் பி.சுப்புலாபுரம் கிராம மக்களை சந்தித்து பேசினர்.அப்போது தலித் மக்களின் குடியிருப்பு களைச் சுற்றி  800 மீட்டருக்கு  தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதும் கோவில் திருவிழாவில் தனித்தனி நேரம் ஒதுக்கி சாமி கும்பிடுவதும் வரி வாங்க மறுப்பதும் உள்ளிட்ட பிரச்சனைகளை தலித் மக்கள் சுட்டிக்காட்டினர். இப்பிரச்சனைகளைத் தட்டிக்கேட்டதால் கடந்த 17 ஆண்டுகளாக சாமி கும்பிடுவது நிறுத்தப்பட் டுள்ளது; மேலும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதும் தெரியவந்தது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு

இப்பிரச்சனை தொடர்பாக மதுரையில் சனிக் கிழமையன்று  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லத் தலைவர் த.செல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:   அனைத்து சமுதாய மக்களும் கலந்து வாழும் ஒரே கிராமத்தில் இரண்டு வெவ்வேறு மயானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட மயானத்தில் எந்தவித அடிப்படை வசதி யும் இல்லை. ஆனால் ஆதிக்க சாதியினர் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மயானத்தில் தகனமேடை மற்றும் மேற்கூரையோடு உள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இறந்துபோன சண்முகவேல் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரின் சடலத்தை பெருமழை காரணமாக எரியூட்ட  முடியவில்லை. இதற்காக ஆதிக்க சாதியினரின் தகன மேடையில் எரியூட்ட அனுமதி கோரியிருந்தும் அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால் வெட்ட வெளியில் தார்ப்பாயின் கீழே சடலத்தை எரிக்க நேர்ந்தது. இந்நிலையில் அதே ஊருக்குள் தாழ்த்தப் பட்ட நபர்கள் வசிக்கின்ற பகுதிக்கும் ஆதிக்கசாதியினர் வசிக்கின்ற பகுதிக்கும் இடையே தடுப்புச்சுவர் ஒன்று கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு எழுப்பப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் புழக்கத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சுவராகவே இதனை கருதுகிறோம். வன்னிவேலம்பட்டிக்குச் செல்லக்கூடிய பொதுப்பாதை யை ஆக்கிரமித்து  ஜெயராமன் என்பவர் சுவர் எழுப்பி யுள்ளார்.வரைபடங்களிலும் இந்த பாதை காண் பிக்கப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி, ஜெயராமன்  மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.  தலித் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் இது போன்ற தீண்டாமைச் சுவர் எழுப்பக்கூடாது என்ற நிலை இருந்தபோதும், 5 மாதத்திற்கு முன்பு இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தலித் மக்கள், அரசு அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் இப்பிரச்சனையில் தமிழக அரசும் மதுரை மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தலையிட்டு இந்த சுவரை அப்புறப்படுத்த வேண்டும்.  இப்பிரச்சனை தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செப்டம்பர் 4 ஆம் தேதியன்று துறை வாரியான அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கவுள் ளோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடமும் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன்,  மாநகர் மாவட்டச்  செயலாளர் இரா.விஜயராஜன் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் செ. முத்துராணி, வி.பி.முருகன், சிபிஎம் டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் வி.சமயன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன் மற்றும் சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உடனிருந்தனர்.