tamilnadu

img

‘பெரு முதலாளிகளின் கூட்டாளி; பொதுமக்களின் பகையாளி’ கே.வரதராசன் பேச்சு

தஞ்சாவூர், ஏப்.11-“அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் கூட்டாளியாக உள்ள பிரதமர் மோடி, வெகுஜன மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பகையாளியாக உள்ளார்” என்றார் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவருமான கே.வரதராசன். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வாக்குகள்கேட்டு, பரப்புரை பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். திமுகநகரச் செயலாளர் எஸ.ஆர்.என்.செந்தில்குமார் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் பேசியதாவது, “எட்டுவழிச் சாலை திட்டத்தில் நிலத்தை கையகப் படுத்தியது, விவசாயிகளிடம் கேட்காமல் நிலத்தை எடுத்தது தவறு, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. விவசாயிகளிடம் கேட்காமல் நிலத்தை எடுத்ததை, நிலத்தை திருடியவர் என்று நீதிமன்றம் சொல்கிறது.

எட்டு வழிச் சாலை திட்டத்தின் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி கூறியிருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் முதலமைச்சராக இருப்பாரா என்பது கேள்விக்குறி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல், விவசாயம் பாதிக்கப்படும் எனபொதுமக்கள் மட்டுமல்ல. ஆய்வியல் அறிஞர்கள் கூட பகிரங்கமாகச் சொல்லியும் இந்தஅரசு எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட், உயர்அழுத்த மின் கோபுரம் என மக்கள், விவசாயிகள், தொழிலாளர் விரோதச் செயல்களில் இந்தஅரசு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இபிஎஸ்சும் வேண்டாம். ஓபிஎஸ்சும் வேண்டாம்.யுபிஎஸ் இருந்தால் போதும். மின்சாரம் பாதிக்கப்பட்டால் உதவும் என அதிமுகவினரே சொல்லும்நிலை உள்ளது. அம்பானி, அதானி உள்ளிட்ட 100 பெரு முதலாளிகளின் கையில் இந்திய சொத்து மதிப்பில் சரிபாதி உள்ளது என அரசின் அறிக்கையே சொல்லுகிறது. ஆனால் ஏழைகளின் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. இந்த மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக மாறி விட்டது. ஏழைகள் மேலும் மேலும் சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை உள்ளது. 

மோடியை செல்லாக்காசாக்க வேண்டும்

அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் கூட்டாளியாக உள்ள பிரதமர் மோடி, வெகுஜன மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பகையாளியாக உள்ளார். நாட்டு மக்களுக்கு அநீதி இழைத்து விட்டு, ரபேல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்து விட்டு, ஊழல்களுக்கு எதிராக போராடுவதாக மோடி சொல்வது இரட்டை வேடம் இல்லையா. நாம்உழைத்து சம்பாதித்த பணத்தை செல்லாது என சொன்ன, பிரதமரை இந்த தேர்தலோடு செல்லாக் காசாக ஆக்க வேண்டும். மத்தியபாஜக அரசும், மக்கள் விரோத அதிமுக அரசும்அகற்றப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு மாதம் 500 ரூபாய் தருவதாக மத்திய அரசு சொல்கிறது. இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்காக என்னசெய்தார்கள். தேர்தலுக்காக வெற்று அறிவிப்பை செய்யும் இவர்களை நம்பலாமா? விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிமருந்துக்கு மானியம் கொடுப்பது தேவையில்லாதது என்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். இது தான் இவர்களுடைய ஆட்சியின் லட்சணம். எதிர்க்கட்சியினரை மிரட்டுவதற்காக மட்டுமே வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஆளும் கட்சியினரின் வீடுகளில் நடத்தும் தைரியம் இவர்களுக்கு உண்டா? எட்டு வழிச்சாலை வழக்கில் மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் செல்வதாக அதிமுக அரசு சொல்கிறது. ஆனால் அதே கூட்டணியில் இருக்கும் பாமக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால் எங்களை ஒருதரப்பாக விசாரிக்க வேண்டுமென கேவியட் மனு தாக்கல் செய்கிறது.

இந்த கூட்டணி விளங்குமா?இவர்களை ஆதரிக்கலாமா? நாட்டின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரச்சனையை கையில் எடுத்து மக்களை தங்களுக்குள் மதரீதியாக மோதவிடுவது, எதிர்க்கட்சிகளை இந்து விரோதிகளாக வர்ணித்து, இந்து வாக்குகளை கவர்ந்து,ஆட்சிக்கு வர திட்டமிடுவது. இதுதான் மத்திய பாஜக அரசின் கொள்கையாக உள்ளது. தேர்தலுக்காக ராமர் பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும். சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும், விவசாயிகள், தொழிலாளிகள், ஏழை நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு குறு தொழில்கள்கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலை வாய்ப்புகள் பறிபோயின. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாமா? கூடாது.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், திமுகமாவட்ட துணைச் செயலாளர் கா.அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் மிசா.அப்துல்சமது, தலைமைக் கழக மாநில பேச்சாளர் ந.மணிமுத்து, கைலாஷ் குமார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர் ராமசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ரோஜா ராஜசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதிசெயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஒன்றியக்குழு உறுப்பினர் சு.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். உறந்தை முரசு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.