இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான நூற்றாண்டு நாயகர் - வாழும் வரலாறு என்.சங்கரய்யா அவர்களது வாழ்த்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின் துவக்க விழாவில் காணொலியாக விரிந்தது.
பிரதிநிதிகள், பார்வையாளர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த அரங்கத்தில், சங்கரய்யாவை காணொலி வாயிலாக பார்த்ததும் பெரும் உற்சாகமும் உத்வேகமும் ஆட்கொண்டது. மெலிந்த தேகம், ஆனால் அதே சிம்மக்குரல். அவரது கர்ஜனை, அவரது வேண்டுகோள், அவரது எழுச்சி முழுக்கம்... ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த தோழர்களின் உள்ளங்களையும் ஆட்கொண்டது. ஒவ்வொருவரின் நெஞ்சமும் கண்களும், இதோ எங்கள் மகத்தான தலைவர் சங்கரய்யா எங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்று கசிந்துருகின. தனது காணொலி உரையின் நிறைவில் “மக்கள் ஜனநாயகப் புரட்சி ஓங்குக” என்று அவர் எழுப்பிய முழக்கம் அரங்கை அதிரச் செய்தது. ஒட்டுமொத்த கட்சியையும் இன்னும் வலுவாக நிமிரச் செய்தது. இதோ அந்த எழுச்சி உரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 23 ஆவது மாநாடு மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு எல்லா வகையிலும் சிறப்பாக, தன்னுடைய காரியங்களை நிறைவேற்றுவதற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு புரட்சிகரமான மார்க்சிஸ்ட் கட்சியினுடைய அமைப்பை தமிழ்நாடு முழுவதிலும் விரிவாக்கும் பணியை சிறப்புறச் செய்வதில் இம்மாநாடு பீடுநடை புரியும் என நம்புகிறேன். இந்த நேரத்தில், விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை நினைவிலே கொண்டு அவர்களுடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்று, நம்முடைய தோழர்கள் அனைவரும் இரவு பகல் பாராது, இந்த லட்சியம் நிறைவேறுவதற்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மதுரை மாவட்டம் மகத்தான பங்குவகித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல், கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும் அது ஒரு முக்கியமான பங்கை ஆற்றி இருக்கிறது என்பதும் நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அந்த விடுதலைப் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், அதேபோல் சமூகத்தில் ஏற்பட்ட இந்தப் பெருந்தொற்றின் போதும், மக்களுக்கு சேவை செய்து அதில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் நினைவுகளை போற்றுவோமாக!
தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சியின் 22 ஆவது மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை பரிசீலித்து அவை எவ்வாறு நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதை இந்த மாநாடு ஆழ்ந்து விவாதிக்கும். அதே போல் அடுத்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய விரிவாக்கத்திற்கும், வெகுஜன வர்க்க அமைப்புகள் விரிவாக்கத்திற்கும் நல்ல திட்டங்களை இந்த மாநாடு வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23 ஆவது மாநாடு கேரளாவில் கண்ணூரில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் மதவெறி, வகுப்புவாத, பாசிச சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், முறியடிப்பதற்கும் எடுக்கப்படக்கூடிய கட்சியின் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில், தமிழகத்தில் ஒரு பலம் பொருந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும், ஒரு சக்தி வாய்ந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியை அமைப்பதற்கும், நம்முடைய கட்சித் தோழர்கள் அனைவரும் இரவு பகல் பாராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ஜனநாயக புரட்சி ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!