டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சில போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நவோமி ஒசாகா அன்னா கரோலினாவை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் சிவ்ரெவ் முதல் சுற்றில் தன்னுடன் போட்டியிட்ட ஜான் மில்மேனை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் அர்ஜெண்டினா நாட்டு வீரர் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ சிலி நாட்டு வீரர் நிக்கோலஸ் ஜாரியை 3-6,6-2,6-1 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். மேலும், கிரீஸ் நாட்டு வீரர் ஸ்டெபெனோஸ் சிட்சிபாஸ் தன்னுடன் போட்டியிட்ட பொலிவியா நாட்டு ஹுகோ டெல்லியனை 4-6, 6-0, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நேற்று ரோலாண்ட் காரோஸில் நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா மற்றும் இத்தாலி நாட்டு வீரர் மரியஸ் கோபில் ஜோடி ஆறாவது இடத்தில் இருந்த ரவென் லாசென் மற்றும் மிட்சல் வீனஸ் ஜோடியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.