tamilnadu

img

டென்னிஸ் உலகை மிரட்டும் இளங்கன்று

சண்டே ஸ்பெஷல்

கடந்த வாரம் நிறைவு பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது சிறுமி மகளிர் ஒற்றையர் பிரிவில் உள்ளூர் நாயகி செரீனாவை புரட்டியெடுத்து சாம்பியன் பட்டத்துடன் டென்னிஸ் உலகை மிரள வைத்தவர்.  அவர் பெயர் பியான்கா ஆண்ட்ரெஸ்கு. இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். டென்னிஸ் உலகிற்கு புதிது என்றாலும், இந்தியன் வெல்ஸ் போன்ற சிறிய தொடர்களில் பட்டம் வென்றுள்ளார். நடப்பு சீசன் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் காலடி வைத்து 2-வது சுற்றில் நடையைக் கட்டினார். அடுத்த 3 மாத இடைவெளியில் தீவிர பயிற்சியுடன் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தனது அதிரடி சுனாமியை அரங்கேற்றி டென்னிஸ் உலகை நடுங்கவைத்துள்ளார். 

சிறப்பு

முன்அனுபவம் இல்லாமல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியது, இறுதிப்போட்டியில் செரீனாவை கண்டு நடுங்காமல் விளையாடியது, ரிவர்ஸ் டிராப் ஷாட்களில் அசத்தியது போன்றவையெல்லாம் பியான்காவின் குறுகிய கால சாதனை ஆகும்.

மனநிலை

பியான்காவின் மனநிலை வயதிற்கு ஏற்ப இல்லை. சீனியர்களுக்கான பொறுமை குணத்தை மிக இளம் வயதில் தானாக வளர்த்துக்கொண்டவர் போல் செயல்படுகிறார். களத்தில் இறங்கிவிட்டால் எதிர் போட்டியாளரின் முகத்தை பெரும்பாலும் பார்க்கமாட்டார். சர்வீஸ் துறைக்கு மட்டும் எதிர் போட்டியாளரின் நடவடிக்கையைக் கவனிப்பார். எதிரணி வீராங்கனை எழுச்சி பெற்றாலும் அதனை கண்டுகொள்ளாமல் சீரான வேகத்தில் மீண்டு எழுச்சியை ருசிப்பார். அதிரடி ஷாட்கள் அதிகம் பயன்படுத்தமாட்டார். கோபம் வந்தால் முரட்டுத்தனமாக விளையாடுவார். மற்ற நேரம் சிரித்துக்கொண்டே விளையாடுவார். எதிர்த்து விளையாடும் வீராங்கனை உலக சாம்பியனாக இருந்தாலும்,”நமக்கென்ன ஒரு கை பார்ப்போம்” எனப் போட்டியை தொடங்குவார். 

ஆட்டமுறை

பியான்காவின் முக்கிய சாதனையாகப் பார்ப்பது அவரது ஆட்டமுறை தான். பேட்மிண்டன் துறையின் முக்கிய ஆட்டமுறையான டிராப் ஷாட்டை டென்னிஸில் வித்தியாசமாக கையாள்கிறார். அதாவது ரிவர்ஸ் முறையில் பந்தை ரிலீஸ் செய்வார். இந்த வகையான டிராப் ஷாட்களை எதிர் பக்கம் திருப்புவது சாதாரண காரியம் இல்லை. ஆடவர் பிரிவில் நடால் (ஸ்பெயின்), மோனபிள்ஸ் (பிரான்ஸ்), நிக் (ஆஸ்திரேலியா) போன்ற வீரர்கள் இந்த வகையான ஷாட்டிற்கு கைதேர்ந்தவர்கள் என்றாலும், இவர்கள் அனைவரும் சீனியர்கள். ஆனால் பியான்கா கத்துக்குட்டி. அதாவது கொம்பு முளைக்காத இளங்கன்று என்பது தான் ஆச்சரியமான விஷயம். இளம் வயதில் ரிவர்ஸ் ஷாட் எப்படி என ஆச்சரியமாகச் சிந்திக்கும் வகையில் விளையாடி வருகிறார்.  

டென்னிஸ் உலகில் கத்துக்குட்டிகள் பலர் வெற்றியை ருசித்தாலும் காலிறுதி வரை பம்பரமாகச் சுழலுவார்கள் அதன் பிறகு அவ்வளவு தான். ஜப்பானின் ஒசாகா இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றிருந்தாலும் பியான்கா அளவிற்கு ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை.  எப்படியோ டென்னிஸ் உலகில் இளங்கன்றுகள் பல இருந்தாலும்  ஏலியன்ஸ் வகையைப் போன்று மாறுபட்ட வகையில் இருக்கும் பியான்கா எதிர்காலத்தில் சாதனைகள் பல ருசிப்பார்.

- சதீஸ் முருகேசன்