tamilnadu

தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

சென்னை, மே 27-தனியார் தண்ணீர் லாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர உணவகங்கள், தனியார் குடியிருப்புகளுக்கு தனியார் தண்ணீர் லாரிகள் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றன.இந்நிலையில், அண்மையில் மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து, அனுமதியின்றி தண்ணீர் எடுத்த தனியார் தண்ணீர் லாரிகள் பறிமுதல், சீல் வைப்பு நடவடிக்கைகள் பாய்ந்தன.இதனை கண்டித்து, திங்கள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.  இதனிடையே முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்ளிட்டோர் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்வதால் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் திரும்பியவுடன் சந்தித்துவிட்டு போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். இதனால், போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.