ஜேஎன்யு மாணவர்கள் உயர்த்தப்பட்டுள்ள விடுதிக் கட்டணத்தை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய திங்கள் கிழமை, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். ஜேஎன்யு பல்கலைக் கழக வளாகத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். காவல்துறையினர் தொடக்கத்தில் பேரணி செல்ல அனுமதித்தனர். ஆயினும், பின்னர் பல்கலைக் கழகத்தின் வாயிலிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்றபோது பேரணியில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தினர்.