tamilnadu

img

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 29 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.17-  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வியாழன் தொடங்கி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில்  ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.  தொடர்ந்து ஒவ்வொரு மாடாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 654 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 212 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 29 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பத்திரிகையாளர்களுக்கு போதிய வசதி இல்லை

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் வாடிவாசல் எதிர்பகுதியில் ஒரு புறத்தில் பத்திரிகையாளர்களுக்கு மேடை அமைப்பது வழக்கம். அதில் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.  ஆனால் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு திடலில் பத்திரிகையாளர் பகுதியில் நான்கு கம்புகள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. மேலே ஒரு தகர சீட்டு போடப்பட்டு இருந்தது. இதனால் நிருபர்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்லவில்லை. வேறு வழியின்றி போட்டோகிராபர்கள் கம்பில் தொங்கியபடி படம் எடுத்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெற்ற போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்தது. இதில் வடகாடு காவல் ஆய்வாளர் பரத் சீனிவாஸ்க்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.