திருவனந்தபுரம், செப்.17- நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக விமான பயணக் கட்டணத்தையும் இந்த துறையில் சரக்கு சேவை வரியையும் குறைக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
கோவளத்தில் பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத்துறை அமைச்சர்களின் கூட்டத்தை துவக்கி வைத்த கேரள முதல்வர் மேலும் பேசியதாவது: சுற்றுலா வாகனங்கள் மீதான வரி விலக்கப்பட வேண்டும். அத்தகைய தடைகள் இல்லாமல் போனால் இந்தியா உலக அளவில் முன்னணி சுற்றுலாவுக்கான இலக்காக மாறும். இந்தியா மிகவும் மாறுபட்ட தன்மை கொண்டது. சுற்றுலாத்துறையில் நல்ல திறன் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றை எதிர்கொள்ள நிலையான தொடர்பும் தலையீடும் தவிர்க்க முடியாதவை. எந்த பகுதியின் சுற்றுலா வளர்ச்சியானாலும் அது நாடு முழுமைக்கும் நன்மை பயனளிக்கும். எனவே ஒருங்கிணைந்த செயல்பாடு இதில் தேவை என கூறினார். கேரளம் விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது. அதை கேரளத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தின் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பிரஹலாத்சிங் பட்டேல் கூறினார். சுற்றுலாத்துறையின் சவால்களை எதிர்கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி தேவை. மாநிலத்தில் முதல்முறையாக இத்தகையதொரு கூட்டம் நடத்தப்படுகிறது என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கு சிறப்பான முன்னுதாரணங்கள் உள்ளன. சுற்றுலா தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் மாநில சுற்றுலா வாரியங்களும் அவற்றின் முத்திரைகளை முன்னிறுத்தல் குறித்த விவாதங்களும் நடைபெற்றன.
பீகார் சுற்றுலா அமைச்சர் கிருஷ்ணகுமார் ரிஷி, கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி, நாகாலாந்து கலை கலாச்சார சுற்றுலாத்துறை ஆலோசகர் எச்.கிஹோவி யெபுடோமி, ஒடிசா சுற்றுலா அமைச்சர் ஜோதி பிரகாஷ் பானிகிரஹி, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.