கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு
ஆலப்புழா, டிச.20- அரசமைப்பு சாசனமும் மதச்சார்பின்மையும் தகர்க்கப்படுவதற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம் தேவை என கேரள மாநில சிஐடியு மாநில மாநாட்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஆலப்புழாவில் கேரள மாநில சிஐடியு மாநாடு கடந்த 17,18,19 தேதிகளில் நடைபெற்றது. வியாழ னன்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணிவகுத்த பேரணியின் நிறைவாக நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: அரசமைப்பு சாசனத்தை பாதுகாக்க விரும்பும் அனைவரும் குடியரசு தினத்தன்று கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஏற்பாடு செய்துள்ள மனிதச் சங்கிலியில் அணிவகுக்க வேண்டும். கேரளத்தின் வடக்கு எல்லை முதல் தெற்கு எல்லை வரை நீளும் மனிதச் சங்கிலி மனிதக் கோட்டையாக மாறும். எல்டிஎப் இதற்கான ஏற்பாடு களை செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், இளை ஞர்கள், விவசாயிகள் முதல் அரசியல் கட்சி களைச் சேர்ந்தவர்கள், கட்சிகளைச் சேராதவர்கள் சங்கிலியில் இணைய வேண்டும்.
ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் உறுதியளித்துள்ள இந்திய அரசமைப்பு சாசனத்தை பாதுகாப்பதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது. அண்மையில் திருவனந்தபுரத்தில் கூட்டாக நடந்த போராட்டத்தை சமூகம் நல்ல விதமாகவே பார்க்கிறது. தில்லியில் கோரிக்கை அட்டையுடன் போராட்டம் நடத்திவரும் இளைஞரிடம் தொலைக்காட்சியினர் கேட்டனர். ‘நீங்கள் எந்த கட்சி யைச் சேர்ந்தவர்’ என்று. ‘நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. ஆனால், இந்த நாடு நிலை நிறுத்தப்பட வேண்டும் என விரும்பும் ஒரு குடிமகன்’ என அந்த இளைஞர் கூறினார். மதச்சார்புள்ளதாக நாட்டை மாற்ற நடக்கும் முயற்சியின் பகுதியாகவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்து ராஷ்டிர மாக மாற்றும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு அமலாக்குகிறது. கட்டுப்பாடில்லாத விளையாட்டாகும் இது. இதற்கு எதிராக இயல்பாகவே போராட்டங்கள் எழும். எப்படி இருந்தாலும் நாடு ஒற்றுமையாக முன்னேறுகிறது என்பது நல்வாய்ப்பாகும். இளைஞர்கள் ஒன்றுபட்டு, கேள்வி எழுப்பி, களமிறங்கி இருக்கிறார்கள்.
ஆனால் தங்களுக்கு எதிராக போராடவே கூடாது என்கிற நிலைபாடு மத்திய அரசுக்கு. நாட்டின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு கூட தடை செய்யப் பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் பொதுச்செய லாளர்களை கைது செய்தனர். ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் படுபாதகமாக நடந்து கொண்டனர். மத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளி யிருக்கிறது. அதை சரி செய்வதாக கூறிக்கொண்டு பெருமைக்குரிய பொதுத்துறைகளான நவரத்தினங்களை விடவும் உயர்ந்த நிலை யில் உள்ள கொச்சி பிபிசிஎல் நிறுவனம் போன்ற வற்றை விற்றுத் தொலைக்கிறார்கள். ஆனாலும் நெருக்கடி தீர்ந்தபாடில்லை. அதை சரி செய்ய மத்திய அரசு முயற்சிக்கவில்லை. மாறாக அரசை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தவே முயற்சிக்கிறது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார். பொதுக்கூட்டத்துக்கு சிஐடியு கேரள மாநில தலைவர் ஆனத்தலவட்டம் ஆனந்தன் தலைமை வகித்தார்.