திருவனந்தபுரம்:
ஊரடங்கு நீடித்தாலும் இல்லையென்றாலும் இனி வரும் நாட்களில் கோவிட் 19 குறித்துகவனமாக இருக்க வேண்டும். இது எச்ஐவியைப் போல் நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, பொதுசமூகத்தின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முக்கியமானது. அதற்கேற்ப வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தனிமனிதஇடைவெளியும் முகக் கவசம் அணிவதும் வாழ்க்கை முறையாக வேண்டும் என கேரளமுதல்வர் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் வியாழனன்று நடந்த கோவிட் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: பொது இடங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் பழக வேண்டும். அவசியமானபோது மட்டும் பயணங்களும் கூட்டமாககூடுவதும் நடக்க வேண்டும். ஓட்டல்களிலும் விடுதிகளிலும் முன்னதாக நேரம் தீர்மானித்து கால வரையறை செய்வது போன்ற ஏற்பாடுகள்செய்ய வேண்டியதாக இருக்கும். உலகம் முழுவதும் மனித உயிர்களை கபளீகரம் செய்யும் நாசகாரியாக கோவிட் 19 மாறியிருக்கிறது. சிறப்புச் சிகிச்சைகளுக்கான நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதும் முக்கியமானது. மக்களும் அரசு எந்திரமும் அனைத்துவிதமான கவனத்தைச் செலுத்தி இந்த கொள்ளை நோயை வெற்றி கொள்ள வேண்டும்என முதல்வர் கூறினார்.
அரசியல் விளையாட்டுக்கான நேரமல்ல
வாளயார் சோதனை சாவடியில் கேரளத்தில் நுழைய அனுமதி பெறாத கோவிட் நோயாளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு தனிமையில் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் குறித்து கூறுகையில், பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றார். அரசியல் விளையாட்டுக்கான நேரமல்ல இது.சிலர் தவறான எண்ணத்துடன் உள்ளனர். நம்மை எதுவும் பாதிக்காது என அவர்கள் கருதுகிறார்கள். நோய்க் கிருமிக்கு நாம் வகிக்கும் பொறுப்புகள் பொருட்டல்ல. ஆபத்து எத்தனைபெரியது என்பதை உணர வேண்டும் என சுட்டிக்காட்டினார்.முறையான பரிசோதனைகள் இல்லாமல் ஒருவர் நுழைந்தால் ஒரு சமூகம் நெருக்கடிக்கு உள்ளாகிறது. இதைக் கூறுகையில் வேறுவிதமாக சிந்திக்க வேண்டியதில்லை. அத்துமீறிநுழைய முயன்றவர்களுக்கு எதிராகவும், அதற்கு உதவி செய்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் இருக்கும். உணர்ச்சி வயப்படல் அல்ல, சிந்தனையே தேவை எனவும் முதல்வர் கூறினார்.
26 பேருக்கு கோவிட்
கேரளத்தில் வியாழனன்று 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. காசர்கோடு 10, மலப்புறம் 5, பாலக்காடு, வயநாடு தலா 3, கண்ணூர் 2, பத்தனம்திட்டா, இடுக்கி, கோழிக்கோடு தலா ஒருவர். இதில் வெளிநாட்டிலிருந்து வந்த 7 பேர் உட்பட 14 பேர் வெளியிலிருந்து வந்தவர்கள். சென்னையிலிருந்து வந்தோர் 2, மும்பை 4, பெங்களூரு 1 என வெளி மாநிலங்களிலிருந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதியானது. 11 பேருக்கு தொடர்பு மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இதல் 2 சுகாதார ஊழியர்களும் (காசர்கோடு), ஒரு காவல்துறையைச் சேர்ந்தவரும் (வயநாடு) உள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூவர் குணமடைந்தனர்.
கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நோய் தொற்று புதனன்று பத்தாக உயர்ந்தது, வியாழனன்று 26 ஆக அதிகரித்துள்ளது. இது நாம் எதிர்கொள்ளவிருக்கும் விபத்தின் அறிகுறியை முன்னறிவிப்பதாகும். இந்த நெருக்கடியை சந்திக்கவும், கடந்து செல்லவும் முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு உள்ளது. மக்களும் அரசு எந்திரமும் கவனமுடன் செயல்பட்டு இதிலிருந்து மீண்டு வரத்தான் போகிறது. இதுவரை 560 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதில் தற்போது 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். 36,910 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 36,362 பேர் வீடுகளிலும் 548 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். வியாழனன்று 174 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை 40,692 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் 39,619 நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன. சென்டினல் சர்வைலன்சின் ஒரு பகுதியாக முன்னுரிமை பிரிவில் உள்ள 4347 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 4249 முடிவுகள் எதிர்மறையாக தொற்று இல்லை என வந்தன. ஹாட் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை 15 எனவும் முதல்வர் தெரிவித்தார்.